ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் சரக்கு வாகனங்கள் வாங்க விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்


ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் சரக்கு வாகனங்கள் வாங்க விண்ணப்பிக்கலாம்  கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 19 Feb 2023 12:15 AM IST (Updated: 19 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின முதல் தலைமுறை இளைஞர்கள் மானிய உதவியுடன் பயண மற்றும் சரக்கு வாகனங்கள் வாங்கி தொழில் தொடங்கிட விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை


ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின முதல் தலைமுறை இளைஞர்கள் மானிய உதவியுடன் பயண மற்றும் சரக்கு வாகனங்கள் வாங்கி தொழில் தொடங்கிட விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

புதிய தொழில்முனைவோர்

தமிழக அரசு ஒவ்வொரு இளைஞரையும் தொழில் முனைவோராக உருவாக்குவதற்கு புதிய தொழில் தொடங்க, முதல் தலைமுறை இளைஞர்களுக்கான புதிய தொழில் முனைவோர் ஆக்க மாவட்ட தொழில் மையம் மூலமாக செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் தொழில் தொடங்கிட ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை வங்கிகள் மூலம் கடனுதவி பெறவும் தமிழக அரசின் மானியமாக திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.75 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது.

மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கூடுதலாக 10 சதவீதம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தில் 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வரையறுக்கப்பட்ட வங்கிகள், தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு கிராம வங்கிகள் மூலமாகவும் கடனுதவி வழங்கப்படுகிறது.

தகுதிகள்

இத்திட்டத்தின் மூலம் கடனுதவி பெற முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருக்க வேண்டும். தற்போது குறைந்தபட்ச கல்வி தகுதியாக 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாகவும், 21 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும் மற்றும் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். இத்திட்டத்தில், தற்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின முதல் தலைமுறை தொழில் முனைவோர்களிடமிருந்து எண்ணிக்கையில் கட்டுபாடுகளின்றி விண்ணப்பங்கள் பெற தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது,

விண்ணப்பங்கள் வணிக நோக்கத்திற்கான பயண வாகனங்கள், சரக்கு வாகனங்கள், ஜே.சி.பி, ரோடு ரோலர் கலவை எந்திரம் டேங்கர் டிரக், கிரேன்கள் மற்றும் போர்க்லிப்ட் கருவிகள், ஆழ்துளை கிணறு வாகனங்கள், நடமாடும் உணவக வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் ஆகிய தொழில்களுக்கும் விண்ணப்பிக்கலாம்.

எனவே, தகுதியுள்ள முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதள முகவரியில் தங்களது விவரங்களை பூர்த்தி செய்து, அதன் நகல் மற்றும் சான்றிதழ்களுடன் பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், கலெக்டர் அலுவலக வளாகம் சிவகங்கை - 630562 என்ற விலாசத்திற்கு அனுப்பலாம் இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story