நீர்வள ஆதாரங்களை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன-கலெக்டர் தகவல்
நீர்வள ஆதாரங்களை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
காரைக்குடி
நீர்வள ஆதாரங்களை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
குறைதீர்க்கும் கூட்டம்
காரைக்குடி கவியரசு கண்ணதாசன் மணி மண்டபத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். சாக்கோட்டை, தேவகோட்டை, கல்லல் வட்டாரங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், விவசாயிகள் எடுத்துரைத்த கோரிக்கைகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்கள் விரிவாக விளக்கினர்.
கூட்டத்தில் கலெக்டர் கூறியதாவது:- நீர்வள ஆதாரங்களை வலுப்படுத்துவதற்கென மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நீர்வள ஆதாரத்துறை சார்பில் 150 கண்மாய்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் 241 கண்மாய்களில் பணிகளை மேற்கொள்ள அதற்கான முன்மொழிவு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி தரப்பட்டவுடன் பணிகள் தொடங்கப்படும். மேலும் அடுத்த நிதியாண்டிலும் 300 கன்மாய்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கண்மாய்களையும் மேம்படுத்துவதற்கு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நலத்திட்ட உதவிகள்
நில அளவைத்துறையினர் விவசாயிகள் கோரும் அளவீட்டுப்பணிகளை விரைந்து மேற்கொள்ளவும், விவசாயிகளுக்கான மின் வினியோகங்களை சீரான முறையில் வழங்கிடவும், தேவையான உரங்களை இருப்பு வைத்திடவும், வங்கிகள் மூலம் கடனுதவிகள் வழங்கி வேளாண் சார்ந்த புதிய தொழில்கள் தொடங்க உறுதுணையாக இருந்திடவும் கடனுக்குரிய மானியத்தொகையினை தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு உடனடியாக வழங்கிடவும் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பின்னர் உழவர் இதழினை கலெக்டர் வெளியிட்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜூனு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் ரவிச்சந்திரன், வருவாய் கோட்டாட்சியர்கள் சுஜிதா, பால்துரை, வேளாண்மை துறை இணை இயக்குனர் தனபாலன், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் அழகுமலை மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.