கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கு ரேஷன்கடைகளில் விண்ணப்பம்-பயிற்சி கூட்டத்தில் கலெக்டர் தகவல்
மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கு தகுதியான பயனாளிகளை தேர்வு செய்வதற்காக இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கான பயிற்சியை கலெக்டர் சரயு தொடங்கி வைத்தார்.
பயிற்சி
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளை தேர்வு செய்வதற்காக இல்லம் தேடி கல்வி இயக்க தன்னார்வலர்களுக்கான பயிற்சி நடந்தது. இந்த பயிற்சியை மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு தொடங்கி வைத்து பேசினார்.
இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், இல்லம் தேடிக்கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சர்ஜான் பம்ஸ், மின் ஆளுமை திட்ட மேலாளர் வினோத் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
கலெக்டர் பேசியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் அறிவித்த முதன்மை திட்டங்களில் ஒன்றான கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 செப்டம்பர் மாதம் 15-ந் தேதி முதல் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இத்திட்டத்திற்கு தகுதியான பயனாளிகளை தேர்ந்தெடுக்க 10 ஒன்றியங்களில் இருந்து 40 இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
இப்பயிற்சியில், தகுதியான விண்ணப்பங்களை தேர்வு செய்வது குறித்தும், விண்ணப்பங்கள் பதிவு செய்வது குறித்தும், தகுதியான பயனாளிகள் என்னென்ன விவரங்கள் கொண்டு வர வேண்டும் என்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
1,978 தன்னார்வலர்கள்
இந்த பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் அந்தந்த ஒன்றியங்களில் முகாமில் விண்ணப்பங்களை இணைய வழியில் ஏற்ற உள்ள தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்க உள்ளனர். இதனால் 1,978 தன்னார்வலர்கள் பயிற்சி பெற உள்ளனர். விண்ணப்ப படிவங்கள் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளன.
மேலும், முகாமிற்கு பயனாளிகள் எந்த தேதியில் எந்த நேரத்தில் வர வேண்டும் என்பதற்கான டோக்கன் வழங்கப்பட உள்ளது. அவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.