கொரோனா தொற்றால் வெளிநாட்டில் வேலையிழந்து தமிழகம் திரும்பிய நபர்களுக்கு தொழில் தொடங்க கடன் உதவி கலெக்டர் தகவல்


கொரோனா தொற்றால் வெளிநாட்டில் வேலையிழந்து தமிழகம் திரும்பிய நபர்களுக்கு தொழில் தொடங்க கடன் உதவி கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 28 May 2023 12:15 AM IST (Updated: 28 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்றால் வெளிநாட்டில் வேலையிழந்து தமிழகம் திரும்பிய நபர்களுக்கு தொழில் தொடங்க கடன் உதவி வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

கடலூர்

கொரோனா தொற்று காரணமாக வெளிநாட்டில் வேலையிழந்து தமிழகம் திரும்பிய தமிழர்களில் தொழில் தொடங்க விரும்புவோரை ஊக்குவிப்பதற்காக தமிழக அரசால் புலம்பெயர்ந்தோர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தமிழக அரசு மானியத்துடன் கூடிய வங்கி கடன் உதவி மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்க விண்ணப்பங்கள் பரிந்துரை செய்யப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த விரிவான விவரம் பின்வருமாறு:-

2 ஆண்டு வேலை

வயது வரம்பாக, பொதுப்பிரிவினர் - 18 வயது முதல் 45 வயது வரை, சிறப்பு பிரிவினர் - 18 வயது முதல் 55 வயது வரை (எஸ்.சி., எஸ்.டி., பி.சி., எம்.பி.சி., சிறுபான்மையினர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள்). கல்வித் தகுதியாக 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். திட்ட மதிப்பீடாக சேவை மற்றும் வணிகம் துறை சார்ந்த தொழில்களுக்கு குறைந்தபட்சம் ரூ.5 லட்சம், உற்பத்தித் துறைக்கு அதிகபட்சம் - ரூ.15 லட்சம், தொழில்முனைவோர் பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத பங்களிப்பு, சிறப்பு பிரிவினர் 5 சதவீதம், தகுதியான தொழில்களான அனைத்து உற்பத்தி, சேவை மற்றும் வணிகம் சார்ந்த தொழில்கள், விசா விவரங்களாக, வேலைவாய்ப்பு விசாவுடன் 2 ஆண்டுகளுக்கு குறையாமல் வெளிநாட்டில் வேலை பார்த்திருக்க வேண்டும். 1. 1. 2020 அல்லது அதற்கு பிறகு வெளிநாட்டில் இருந்து தமிழகம் திரும்பியவராக இருக்க வேண்டும். இதற்காக விண்ணப்பிக்க கடவுச் சீட்டு, விசா நகல், கல்விச்சான்று, இருப்பிடச்சான்று, சாதிச்சான்று, மாற்றுத்திறனாளிகளுக்கான சான்று ஆகியவற்றின் நகல்கள், திட்ட விவரங்கள் இருக்க வேண்டும்.

மானிய தொகை

இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து தொழில் தொடங்கும் தொழில் முனைவோர்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 25 சதவீத அரசு மானியமாக (அதிகபட்ச மானியத்தொகை ரூ.2.5 லட்சம் வரை) வழங்கப்படும். மானியத்தொகை 3 ஆண்டுகளுக்கு வைப்பு நிதியாக வைக்கப்பட்ட பின்னர் கடன் தொகையில் சரிகட்டப்படும்.

ஆகவே கொரோனா பெருந்தொற்று பரவலால் வெளிநாட்டில் வேலையிழந்து தமிழகம் திரும்பிய கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, தொழில் தொடங்க www.msmeonline.tn.gov.in/megp என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும்.

மேலும், விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், கடலூர் அலுவலகத்தை நேரிலோ அல்லது அலுவலக தொலைபேசி எண் : 04142 -290116, உதவிப்பொறியாளர் (தொழில்கள்) 89255 33938 என்ற எண்ணில் அலுவலக வேலை நாட்களில் தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story