மதி அங்காடி அமைக்க மகளிர் சுய உதவிக்குழுவினர் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
மதி அங்காடி அமைக்க மகளிர் சுய உதவிக்குழுவினர் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் மற்றும் தயாரிப்புகளை விற்பனை செய்ய ஏதுவாக மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் மதி அங்காடி, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் சுற்றுலா தளங்களான பொம்மையார்பாளையத்தில் தாண்டவராயன்குப்பம் கடற்கரை, செஞ்சிக்கோட்டை அருகில் மற்றும் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் அருகில் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதன் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களுக்கு சந்தைவாய்ப்பு கிடைப்பதுடன் வாழ்வாதாரமும் உறுதி செய்யப்படும். விண்ணப்பிக்கும் மகளிர் சுய உதவிக்குழுவானது ஒரு ஆண்டு பூர்த்தி செய்ததாகவும், தேசிய ஊரக வாழ்வாதார இணையத்தில் பதிவு பெற்றிருத்தல் வேண்டும்.
எனவே மேற்கண்ட இடங்களின் அருகே மதி அங்காடி அமைக்க விருப்பம் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் தங்கள் விவரத்துடன் விழுப்புரம் மகளிர் திட்டத்தின் திட்ட இயக்குனர் அலுவலகத்திற்கு வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் இதுகுறித்த விரிவான விவரங்களை மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித்துறை கட்டிடத்தில் செயல்படும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் அலுவலகத்தை அலுவலக நேரத்தில் அணுகி தேவைப்படும் உரிய விவரங்களை தெரிந்துகொள்ளலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்.