அரசு மாதிரி பள்ளி பணிகளை கலெக்டர் ஆய்வு
சிவகங்கை அருகே அரசு மாதிரி பள்ளி பணிகளை கலெக்டர் மதுசூதன்ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சிவகங்கை அருகே அரசு மாதிரி பள்ளி பணிகளை கலெக்டர் மதுசூதன்ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் அகில இந்திய நுழைவுத்தேர்வு போன்ற உயர்கல்விக்கு தங்களை தயார் செய்யும் விதமாக, உண்டு உறைவிட அரசு மாதிரிப்பள்ளியினை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கிட முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில் கீழக்கண்டனியில் உள்ள பண்ணை பொறியியல் கல்லூரி வளாகத்தில் அரசு மாதிரிப்பள்ளியை தற்காலிகமாக தொடங்கிட திட்டமிடப்பட்டுள்ளது, இதையொட்டி அங்கு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அடிப்படை வசதி
பின்னர் அவர் கூறியதாவது:- இம்மாதிரிப்பள்ளியில் 12-ம் வகுப்பில் உயிரியல், கணிதம் பயிலும் 80 மாணவ, மாணவிகள் இந்த மாதம் முதல் பயிலவுள்ளனர்.
தொடர்ந்து, அடுத்த மாதத்தில் 11-ம் வகுப்பில் உயிரியல் பாடப்பிரிவு மற்றும் கணினி-கணிதம் பாடப்பிரிவு படிக்கும் 160 மாணவ, மாணவிகள் சேர்க்கப்படவுள்ளனர்.
மாணவ, மாணவிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள், தங்கும் விடுதிகள் போன்ற அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன், மாவட்ட கல்வி அலுவலர் முத்துச்சாமி, மாதிரிப்பள்ளி தலைமையாசிரியர் போஸ், உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சீத்தாலெட்சுமி, முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் அருளானந்தம், ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.