தேனி ராஜவாய்க்காலில் கலெக்டர் ஆய்வு; தூர்வாரும் பணியை மீண்டும் தொடங்க உத்தரவு


தேனி ராஜவாய்க்காலில் கலெக்டர் ஆய்வு; தூர்வாரும் பணியை மீண்டும் தொடங்க உத்தரவு
x

மக்கள் சாலை மறியல் செய்ததன் எதிரொலியாக தேனி ராஜவாய்க்காலில் கலெக்டர் முரளிதரன் ஆய்வு செய்தார். அப்போது தூர்வாரும் பணியை மீண்டும் தொடங்க கலெக்டர் உத்தரவிட்டார்.

தேனி

மக்கள் சாலை மறியல் செய்ததன் எதிரொலியாக தேனி ராஜவாய்க்காலில் கலெக்டர் முரளிதரன் ஆய்வு செய்தார். அப்போது தூர்வாரும் பணியை மீண்டும் தொடங்க கலெக்டர் உத்தரவிட்டார்.

கலெக்டர் ஆய்வு

தேனி ராஜவாய்க்கால் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்தது. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் வடிந்து செல்ல வழியின்றி சாலையில் குளமாக தேங்கி வருகிறது. கடந்த மாதம் இந்த வாய்க்கால் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது. சில நாட்கள் பணி நடந்த நிலையில், ஆக்கிரமிப்பு பகுதிகளில் பணிகளை மேற்கொள்ள முடியாமல் தற்காலிகமாக இந்த பணி நிறுத்தப்பட்டது. மீண்டும் தூர்வாரும் பணிகள் தொடங்கப்படாததால், கடந்த 17-ந்தேதி பெய்த கன மழையால் தேனி நகர் வெள்ளத்தில் தத்தளித்தது. பழைய பஸ் நிலையம், பங்களாமேடு பகுதிகள் குளமாக மாறின. இதனால் ராஜவாய்க்கால் தூர்வாரும் பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி தேனியில் நேற்று பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் முரளிதரன் இன்று இந்த வாய்க்கால் பகுதிக்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். பங்களாமேடு, பழைய பஸ் நிலையம் பின்பகுதியில் ஆகிய இடங்களில் ஆக்கிரமிப்பால் சுருங்கியும், தூர்வாரப்படாமல் புதர்மண்டியும் கிடப்பதை கலெக்டர் பார்வையிட்டார்.

தூர்வார உத்தரவு

அப்போது அங்கு வந்த பொதுமக்கள் இந்த வாய்க்காலை தூர்வாராததால் நகர் பகுதியில் சந்திக்கும் பிரச்சினைகள், பாதிப்புகள் குறித்து கலெக்டரிடம் முறையிட்டனர். இதையடுத்து பொதுப்பணித்துறை, நகராட்சி நிர்வாகம் இணைந்து இந்த வாய்க்கால் தூர்வாரும் பணியை மீண்டும் தொடங்கி, மழைநீர் தேங்காமல் கடந்து செல்ல நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது நகராட்சி ஆணையாளர் வீரமுத்துக்குமார், சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம் மற்றும் அலுவலர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். கலெக்டர் உத்தரவை தொடர்ந்து நேற்று வாய்க்கால் தூர்வாரும் பணி மீண்டும் தொடங்கியது.


Next Story