ராமநாதபுரம் நகராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு


ராமநாதபுரம் நகராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு
x
தினத்தந்தி 10 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-11T00:15:36+05:30)

ராமநாதபுரம் நகராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் அரசு பள்ளியில் ஆசிரியை பாடம் கற்பித்ததை மாணவர்களுடன் அமர்ந்து கவனித்தார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் நகராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் அரசு பள்ளியில் ஆசிரியை பாடம் கற்பித்ததை மாணவர்களுடன் அமர்ந்து கவனித்தார்.

கலெக்டர் ஆய்வு

ராமநாதபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி ராமநாதபுரத்தில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி செலவில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டுமான பணி, செம்மங்குண்டு ஊருணியில் ரூ.1 கோடியே 3 லட்சம் செலவில் நடைபாதை அமைக்கும் பணி, முகவை ஊருணியில் ரூ.2.56 கோடி செலவில் நடைபாதை, சுற்று சுவர், தெரு விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறைகள், அமரும் இருக்கை, குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் அமைக்கும் பணி ஆகியவற்றை பார்வையிட்டார்.

நீலகண்டி ஊருணி ஆக்கிரமிப்புகளை அகற்றி கரையில் மரக்கன்றுகள் நட்டு தூய்மையாக மாற்ற உத்தரவிட்டார். பாத்திமா நகரில் தூய்மை இந்தியா திட்டம், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நுண் உர செயலாக்க மையத்தை பார்வையிட்டார். வனசங்கரி அம்மன் கோவில் தெருவில் செயல்படாமல் உள்ள திடக்கழிவு மேலாண்மை திட்ட மையத்தை மாற்று இடம் தேர்வு செய்து செயல்படுத்த உத்தரவிட்டார்.

வகுப்பறையில் அமர்ந்து

மேலும், காட்டூரணி ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவதை பார்வையிட்டார். ராமநாதபுரம் யூனியன் பேராவூர் இந்திரா நகரில் உள்ள குடியிருப்புகளுக்கு அரியசாமி கோவில் ஊருணியில் உள்ள கிணறு மூலம் தண்ணீர் எடுத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சேமித்து தண்ணீர் வழங்குவது தொடர்பாகவும் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இதற்கிடையே காட்டூரணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியை மாணவர்களுக்கு கற்பித்ததை வகுப்பறையில் மாணவர்களுடன் அமர்ந்து கவனித்தார். மேலும், மாணவர்களின் வருகை பதிவேட்டை ஆய்வு செய்து நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராத மாணவர்கள் இடைநிற்றலை தடுக்க அவர்களது பெற்றோர்களிடம் அறிவுரை வழங்கி நடவடிக்கை எடுக்க கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின்போது ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம், நகராட்சி ஆணையர் சுரேந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் மரகதநாதன், தாசில்தார்கள் சுரேஷ்குமார், தமீம்ராஜா, ராமநாதபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சேவுகபெருமாள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story