அங்கன்வாடி மையம், ரேஷன்கடை,உழவர் சந்தையில் கலெக்டர் ஆய்வு


அங்கன்வாடி மையம், ரேஷன்கடை,உழவர் சந்தையில் கலெக்டர் ஆய்வு
x

கிருஷ்ணகிரியில் அங்கன்வாடி மையம், ரேஷன் கடை, உழவர் சந்தையில் கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.

கிருஷ்ணகிரி

கலெக்டர் ஆய்வு

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், வெங்கடாபுரம் ஊராட்சி, கொத்தப்பெட்டா அங்கன்வாடி மையம் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு மையம், கிருஷ்ணகிரி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க ரேஷன் கடை, கூட்டுறவு மருந்தகம் மற்றும் கிருஷ்ணகிரி உழவர் சந்தை ஆகியவற்றை கலெக்டர் தீபக் ஜேக்கப் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.

கொத்தப்பெட்டா அங்கன்வாடி மையத்தை பார்வையிட்ட அவர், குழந்தைகளின் தினசரி வருகை பதிவேடு, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு, குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள், மின் இணைப்பு, குழந்தைகளின் எடை, உணவு பொருட்கள் இருப்பு குறித்து ஆய்வு செய்தார். மேலும் அங்கன்வாடி பணியாளர்கள் குழந்தைகள் சரியான நேரத்திற்கு வருகை தர அவர்களின் பெற்றோர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என கூறினார்.

குடிநீர் சுத்திகரிப்பு மையம்

மேலும், அங்கன்வாடி மையம், சமையலறை பகுதிகளை தூய்மையாக பராமரிக்கவும், தினசரி வழங்கப்படும் உணவு பட்டியலை பட்டியலிட வேண்டும் என அங்கன்வாடி பணியாளர்களை கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து, கொத்தப்பெட்டாவில் மாநில நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை பார்வையிட்டு குடிநீர் வினியோகம் சீராக வழங்கப்படுகிறதா என்பதை பொதுமக்களிடம் கேட்டறிந்தார். பழுதடைந்த குடிநீர் குழாய்களை உடனடியாக சீரமைக்க வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும், கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட காந்திரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க ரேஷன்கடையில் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருட்களின் இருப்புகள் குறித்த பதிவேடுகள் மற்றும் எந்திரங்களை கலெக்டர் தீபக் ஜேக்கப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அரசு மருத்துவமனை

தொடர்ந்து, கூட்டுறவு மருந்தகத்தை பார்வையிட்டு தினசரி விற்பனை, மருந்துகள் இருப்பு, காலாவதியான மருந்து பதிவேடுகளை பார்வையிட்டார். மேலும், கிருஷ்ணகிரி உழவர் சந்தையை பார்வையிட்டு அங்காடிகளின் எண்ணிக்கை, தினசரி காய்கறிகள் வரத்து, தினசரி விற்பனை, வாகனங்கள் நிறுத்தும் இடம், குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள், காய்கறிகள் இருப்பு வைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள குளிர்பதன கிடங்கு, மின்விளக்கு வசதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, மத்தூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், மருந்துகள் இருப்பு குறித்தும், தினசரி நோயாளிகளின் வருகை, உயர் சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நோயாளிகள் பரிந்துரை மற்றும் மருத்துவர்கள், பணியாளர்கள் வருகை பதிவேடு குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், மத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை பார்வையிட்டு, கற்றல் திறன் குறித்து மாணவ, மாணவிகளிடம் உரையாடினார்.

மேலும், போச்சம்பள்ளியில் வார சந்தை செயல்படும் பகுதியை பார்வையிட்டு, சந்தையை மேம்படுத்துவதற்கு உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள கருத்துரு தயாரிக்க வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, போச்சம்பள்ளி தாசில்தார் அலுவலகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து, தாசில்தார் அலுவலகத்தில் செயல்படும் இ-சேவை மையத்தை பார்வையிட்டார்.

இந்த ஆய்வின் போது தாசில்தார்கள் சம்பத் (கிருஷ்ணகிரி), தேன்மொழி (போச்சம்பள்ளி) மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story