துங்கபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு


துங்கபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு
x

துங்கபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் மாவட்ட கலெக்டர் கற்பகம் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது துங்கபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், மருந்து வகைகள் மற்றும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரைகளின் இருப்பு பதிவேடு, நோயாளிகளின் வருகை பதிவேடு, அனைத்து வகையான கர்ப்பிணிகள் குறித்த பதிவேடு, மக்களைத்தேடி மருத்துவ திட்ட பதிவேடு, தடுப்பூசி இருப்பு வினியோக பதிவேடு, ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்ததற்கான பதிவேடுகள் ஆகியவை முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா? என ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து சுகாதார நிலைய அலுவலர்கள், மருத்துவர்கள், நோயாளிகளிடம் கனிவாக நடந்து கொள்கிறார்களா?, தேவையான மருந்து- மாத்திரைகள் வழங்கப்படுகிறதா? என்றும், சிகிச்சை பெற வந்த நோயாளியிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.

மேலும் துங்கபுரம் தேனூர் பகுதியில் உள்ள நியாய விலை கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்தும், அதன் இருப்பு குறித்தும் மற்றும் வினியோகிக்கப்பட்ட பொருட்களின் விவரங்கள் இணைய வழியில் பதிவேற்றம் செய்யப்படுகிறதா? என்பது குறித்தும், பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட பொருட்கள் உரிய தரம் மற்றும் எடையில் வழங்கப்படுகிறதா? என கடைக்கு பொருட்கள் வாங்க வந்த குடும்ப அட்டைதாரர்களிடம் கேட்டறிந்தார். துங்கபுரம் பகுதியில் உள்ள இ-சேவை மையத்தில் வழங்கப்படும் சான்றிதழ்கள் குறித்தும், சான்றிதழ்கள் உடனுக்குடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வருவாய் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் ரூ.50 லட்சம் செலவில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளையும் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வகுமார், சேகர், குன்னம் தாசில்தார் அனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story