கல்லூரி மாணவிகள் விடுதியில் கலெக்டர் ஆய்வு
ராமநாதபுரம் அரசு சீர்மரபினர் கல்லூரி மாணவிகள் விடுதியில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம் அரசு சீர்மரபினர் கல்லூரி மாணவிகள் விடுதியில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் திடீர் ஆய்வு நடத்தினார். விடுதியில் மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவு, அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். விடுதி வளாகத்தில் தோட்டக்கலைதுறை மூலம் காய்கறி தோட்டம் அமைத்து கொடுக்கப்பட்டு உள்ளது. அந்த தோட்டத்தை மாணவிகள் சிறப்பாக பராமரித்து வருகின்றனர். காய்கறி தோட்டத்தில் விளைந்த காய்கறி வகைகளை மாணவிகள் உணவுக்கு பயன்படுத்துவதாக தெரிவித்தனர். மாணவிகள் பராமரித்து வரும் காய்கறி தோட்டத்தை கலெக்டர் பார்வையிட்டு பாராட்டினார். மாவட்டத்தில் அனைத்து கல்லூரி விடுதி வளாகங்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்களில் உள்ள காலியிடங்களில் இது போன்று காய்கறி தோட்டம் அமைத்து பயன்பெற வேண்டும் என கலெக்டர் கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின்போது பரமக்குடி சப்-கலெக்டர் அப்தாப் ரசூல், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் நாகராஜன், விடுதி காப்பாளர்கள் கிருஷ்ணவேணி, மணிமொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.