வேளாண் சாகுபடி பணிகளை கலெக்டர் ஆய்வு
ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
ஜோலார்பேட்டை ஒன்றியம் சின்னவேப்பம்பட்டு பகுதியில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவி குழு கட்டிட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை கலெக்டர் அமர்குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து கலந்திரா ஊராட்சியில் ரூ.1.53 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் பண்ணை குட்டை அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதே பகுதியில் அறிவழகன் என்ற விவசாயி ஜோலார்பேட்டை வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் சார்பில் பரிந்துரைக்கப்பட்டு புதிதாக வேளாண்மை துறை சார்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கதிரி 1812 ரக வேர்க்கடலையை 2 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்திருந்தார். இதனை பார்வையிட்ட கலெக்டர் மகசூல் குறித்து ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து சின்னமோட்டூர் ஊராட்சியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆயிரம் முருங்கை நாற்றுகள் உற்பத்தி செய்து வரும் பணிகள் குறித்தும், அதனை நடவு செய்வதற்கான கால வரையறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
பருத்தி
மேலும் அதே பகுதியில் விவசாயம் செய்துள்ள ஆர்.என்.எஸ். நர்மதா ரக நெற்பயிரை பார்வையிட்டு பயிரின் வளர்ச்சி மற்றும் அறுவடைக்கான நாட்கள் மகசூல் குறித்து வேளாண்மை துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து மண்டலவாடி ஊராட்சியில் கோவிந்தராஜ் என்ற விவசாயி ஒரு ஏக்கர் பரப்பளவில் உற்பத்தி செய்துள்ள பருத்தி சாகுபடியை ஆய்வு செய்துள்ளதையும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஜோலார்பேட்டை வட்டார வேளாண்மை விரிவாக்கம் மையம் சார்பில் ஒரு குடும்பத்திற்கு 3 தென்னங்கன்று வீதம் 200 குடும்பங்களுக்கு 600 தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமார், வேளாண்மை துணை இயக்குனர் பச்சையப்பன், ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தினகரன் (வட்டார ஊராட்சி), முருகேசன் (கிராம ஊராட்சி), வேளாண்மை அலுவலர் ராதா உள்ளிட்ட துறை அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் உடனிருந்தனர்.