காலை உணவு திட்டத்தை கலெக்டர் ஆய்வு
தீர்த்தனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை கலெக்டர் மாணவர்களுக்கு அமர்ந்து சாப்பிட்டு ஆய்வு செய்தார்.
தீர்த்தனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை கலெக்டர் மாணவர்களுக்கு அமர்ந்து சாப்பிட்டு ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
ஜமுனாமரத்தூர் ஊராட்சி ஒன்றியம் தீர்த்தனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு பட்டியலில் உள்ளவாறு வழங்கப்படுகிறதா என்றும், உணவின் தரம் குறித்தும் மாவட்ட கலெக்டர் முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் மாணவ-மாணவிகளுடன் அமர்ந்து காலை உணவு திட்டத்தில் வழங்கப்படும் உணவினை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார்.
மேலும் அந்தப் பள்ளிக்கு தேவையான புதிய சமையற் கூடம், பள்ளி சுற்றுச்சுவர், சாலை வசதி, அடிப்படை தேவைகள் குறித்து பொதுமக்களின் கோரிக்கையினை கேட்டறிந்து கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றி தரப்படும் என்று தெரிவித்தார்.
கட்டிட பணி
தொடர்ந்து கலெக்டர், வீரப்பனூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் புதிய ரேஷன் கடை பணிகளையும்,
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட பணிகளையும், கோவிலூர் ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டுமான பணிகளையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.
அப்போது பணிகளை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள கண் மருத்துவமனை, சி.டி. ஸ்கேன் அறை, கர்ப்பிணி தாய்மார்கள் பரிசோதனை அறை, மருந்து இருப்பு அறையினையும் அவர் நேரில் பார்வையிட்டார்.
ஆய்வின் போது கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) வீர் பிரதாப் சிங், உதவி கலெக்டர் (பயிற்சி) ரஷ்மிராணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ராமகிருஷ்ணன், சப் -கலெக்டர் கலைவாணி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.