வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
திருவாரூரில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
கலெக்டர் ஆய்வு
திருவாரூரை அடுத்த தண்டலை, பெருங்குடி, வேலங்குடி, கீழக்காவதுக்குடி ஆகிய பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது தண்டலை ஊராட்சியில் ரூ.5.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மீன் விற்பனை சந்தையினையும், ரூ.4.96 லட்சம் மதிப்பீட்டில் சமத்துவ மயானத்தில் காத்திருப்போருக்கான அறை அமைக்கப்பட்டுள்ளதையும், பெருங்குடி ஊராட்சியில் ரூ.33.48 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வகுப்பறை கட்டிடம் கட்டுப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடா்ந்து நடுகன்னி வாய்க்காலில் மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பணிபுரிபவர்கள் தூர்வாரப்பட்டு வருவதையும், வேலங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.50 ஆயிரம் மதிப்பீட்டில் சமையலறை மறுசீரமைப்பு பணி மற்றும் பள்ளி தடுப்பு சுவர் அமைக்கப்படுவதையும், ரூ.3.36 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குறுங்காட்டினையும், ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் அங்காடி கட்டிடத்தையும் பாா்வையிட்டார்.
விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவு
ரூ.6.33 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு வருவதையும், கீழக்காவதுகுடி ஊராட்சியில் ரூ.6.74 லட்சம் மதிப்பீட்டில் அம்பேத்கர் நகரில் கான்கீரிட் சாலை அமைக்கப்பட்டுள்ளதையும், ரூ.5.17 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பெண்களுக்காக கட்டப்பட்டு வரும் கழிவறையும், ரூ.2.95 லட்சம் மதிப்பீட்டில் சேந்தமங்கலம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குறுங்காட்டினையும், அக்கரை தெருவில் ரூ.6.90 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுவரும் சமத்துவ மயானத்தினையும் ஆய்வு செய்தார்.
ரூ.1.24 லட்சம் மதிப்பீட்டில் குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் தொட்டிகள் கட்டப்பட்டுவருவதையும், அப்துல்கலாம் நகரில் ரூ.17.68 லட்சம் மதிப்பீட்டில் 750 மீட்டர் நீளத்திற்கு பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்ட கலெக்்டர் பணிகளை விரைவாக முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
முன்னதாக திருவாரூர் ஒன்றிய அலுவலக புதிய கட்டிடம் கட்டும் பணியை பார்வையிட்டார். ஆய்வின்போது திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, ஒன்றியக்குழு தலைவர் தேவா, தாசில்தார் நக்கீரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கர், புவனேஸ்வரி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
மன்னார்குடி
முன்னதாக மன்னார்குடி உதவி கலெக்டர் அலுவலகத்தில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அலுவலகத்தில் பராமரிக்கப்படும் அலுவலக கோப்புகள், நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், மன்னார்குடி உதவி கலெக்டர் கீர்த்தனா மணி, தாசில்தார் கார்த்திக் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.