அலங்காநல்லூர், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆய்வு


அலங்காநல்லூர், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆய்வு
x

அலங்காநல்லூர், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மதுரை

அலங்காநல்லூர்

அலங்காநல்லூர், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆலோசனை

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் 15-ந்தேதி, பாலமேட்டில் 16-ந்தேதி, அலங்காநல்லூரில் 17-ந் தேதியும் ஜல்லிக்கட்டு நடக்கிறது. இதையொட்டி நேற்று கலெக்டர் அனிஷ்ேசகர், போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் மற்றும் அதிகாரிகள் அலங்காநல்லூர், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியில் நடக்கும் முன்னெற்பாடு பணிகளை ஆய்வு செய்தனர். அப்போது வாடிவாசல் பகுதிகள், காளைகள் வெளியேறும் இடம், காளைகள் வரிசைபடுத்தும் இடம், தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி, பார்வையாளர்கள் அமரும் கேலரிகள், மருத்துவ பரிசோதனை செய்யும் இடத்தை பார்வையிட்டனர்.

பின்னர் ஜல்லிக்கட்டை பாதுகாப்பாக நடத்துவது குறித்து ஜல்லிக்கட்டு கமிட்டி மற்றும் வருவாய்துறை அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார். இதைதொடர்ந்து கலெக்டர் கூறியதாவது:-

300 மாடுபிடி வீரர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க முடியும். ஜல்லிக்கட்டு காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை மட்டுமே நடைபெறும். காளைகள் முன்பதிவு முடிந்த பின்னர் எத்தனை காளைகள் போட்டியில் பங்குபெறுகின்றன என கூறமுடியும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது அரசு அதிகாரிகள், மருத்துவ குழுவினர்கள் மற்றும் பேரூராட்சி தலைவர்கள் ரேணுகா ஈஸ்வரி, சுமதி பாண்டியராஜன், செயல் அலுவலர்கள் ஜுலான் பானு, தேவி, துணை தலைவர்கள் சாமிநாதன், ராமராஜ், தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் பாலமேடு பாலசுப்பிரமணியன், நகர் செயலாளர்கள் ரகுபதி, மனோகரவேல் பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.

அவனியாபுரம்

மதுரை அவனியாபுரத்தில் பொங்கல் பண்டிகையன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும். ஆனால், கடந்த சில வருடங்களாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மாவட்ட நிர்வாகமே அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துகிறது. இந்த ஆண்டும் மாவட்ட நிர்வாகமே ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துகிறது. மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, அவனியாபுரம் கிராம மக்கள் மற்றும் கமிட்டியை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. குறிப்பாக வாடிவாசல், மாடுகளுக்கு பரிசோதனை செய்யும் இடம், மாடுகளை வரிசையாக நிற்க வைக்கும் இடம், மாடுகள் சேகரிக்கும் இடம், பார்வையாளர்கள் அமரும் பகுதி உள்ளிட்ட இடங்களில் தடுப்பு கம்புகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்தநிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பணிகளை கலெக்டர் அனிஷ்சேகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், வாடிவாசல், வீரர்களுக்கு சோதனை செய்யுமிடம், மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் இடம் உள்ளிட்ட இடங்களில் செய்யப்பட்டு வரும் பணிகளை நேரில் பார்வையிட்டார். மேலும், கடந்த ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் நடைபெற்ற குளறுபடிகள், உயிரிழப்புகள் மீண்டும் நடக்காமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். ஆய்வின் போது, கமிஷனர் சிம்ரன்ஜித் சிங் காலோன், போலீஸ் துணை கமிஷனர் சாய்பிரனீத் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story