புதிதாக அமைக்கப்பட்ட குளத்தை கலெக்டர் ஆய்வு
புதிதாக அமைக்கப்பட்ட குளத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.
மங்களமேடு:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பிரம்மதேசம் ஊராட்சி வடக்கு மாதவி சாலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.19 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய குளத்தினை மாவட்ட கலெக்டர் கற்பகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை மிக விரைவில் அகற்ற வேண்டும் என்றும், கரைகளை பலப்படுத்த வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து பிரம்மதேசம் பகுதியில் கருப்பையா கோவில் அருகே உள்ள குட்டையை கலெக்டர் பார்வையிட்டு, ஆக்கிரமிப்புகளை விரைவில் அகற்றி குளத்தில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் இந்த கிராமத்தில் உள்ள பொது இடங்களை சுத்தம் செய்ய வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவருக்கு உத்தரவிட்டார். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மரியதாஸ், செல்வமணியன், உதவி பொறியாளர் மனோகர், வேப்பந்தட்டை தாசில்தார் துரைராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
சில நாட்களுக்கு முன்பு வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவிலில் தொல்லியல் துறை மூலம் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகள், தேவையான அடிப்படை கட்டமைப்புகளுக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள், கொடிமரம் அமைப்பது, தெப்பக்குளத்திற்கு அனைத்து காலங்களிலும் நீர் வருவதற்கு வழி ஏற்படுத்துவது உள்ளிட்டவை குறித்தும், சின்னாறு ஏரி, ஓகளுர் ஏரியில் வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.