கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட இடங்களை கலெக்டர் ஆய்வு


கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட இடங்களை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 13 Dec 2022 12:15 AM IST (Updated: 13 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவெண்காடு அருகே கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட இடங்களை கலெக்டர் லலிதா பார்வையிட்டு, கருங்கல் தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

மயிலாடுதுறை

திருவெண்காடு:

திருவெண்காடு அருகே கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட இடங்களை கலெக்டர் லலிதா பார்வையிட்டு, கருங்கல் தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

கிராமங்களுக்குள் கடல்நீர் புகுந்தது

மாண்டஸ் புயல் காரணமாக திருவெண்காடு அருகே உள்ள நாயக்கர் குப்பம், மடத்து குப்பம் ஆகிய பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்பட்டது. மேலும் கடல் அலை சீற்றத்தின் காரணமாக கடல் நீர் கிராமங்களுக்குள் புகுந்து குடியிருப்புகளை சூழ்ந்தது.இதேபோல் சிங்காரவடிகள் வாய்க்கால், புது குப்பம் வாய்க்கால், செல்லநாறு உள்ளிட்ட வாய்க்கால்களில் கடல் நீர் புகுந்ததால் நெய்த வாசல், சின்ன பெருந்தோட்டம், பெருந்தோட்டம், அகர பெருந்தோட்டம் உள்ளிட்ட கிராமங்களில் 1500 ஏக்கர் விளைநிலங்களை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன.

கலெக்டர் ஆய்வு

மடத்து குப்பம் மற்றும் நாயக்கர் குப்பம் கிராம முக்கியஸ்தர்கள் கலெக்டர் லலிதாவிற்கு தங்கள் கிராமம் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தனர்.தகவல் அறிந்த கலெக்டர் லலிதா நேற்று நாயக்கர் குப்பம், மடத்து கடற்கரை பகுதியில் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது கிராம முக்கியஸ்தர்கள் தங்கள் பகுதியில் கடல் அரிப்பை தடுத்திட கருங்கல் தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

கருங்கல் தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை

இதுதொடர்பாக தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று கருங்கல் தடுப்புச்சுவர் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.இந்த ஆய்வின்போது, ஒன்றிய ஆணையர் இளங்கோவன், மண்டல துணை தாசில்தார் ரவிச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சிகள் சரவணன், கிராம நிர்வாக அதிகாரி ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் தெய்வானை, ஊராட்சி செயலர் கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.இதனைத் தொடர்ந்து திருமுல்லைவாசல், தொடுவாய் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களையும் கலெக்டர் பார்வையிட்டார்.


Next Story