முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன்குமார் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பக்தர்களுக்கு கூடுதல் வசதி செய்து தருவதாக தெரிவித்தார்
உளுந்தூர்பேட்டை
சித்திரை பெருவிழா
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் உலக புகழ்பெற்ற கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை பெருவிழா வருகிற 18-ந் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்க உள்ளது.
விழாவின் சிகர நிகழ்ச்சிகளான திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி அடுத்த மாதம்(மே) 2-ந் தேதியும், மறுநாள் தேரோட்டமும் நடைபெறுகிறது.
ஆய்வு
இதற்கான முன் ஏற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் ஆகியோர் கூத்தாண்டவர் கோவிலில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்கு கழிவறை, குடிநீர் வசதி செய்து கொடுக்கப்படும் இடங்கள், போக்குவரத்து வசதி மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் ஆகியவற்றை பார்வையிட்டனர்.
கூடுதல் வசதி
இதைத் தொடர்ந்து கலெக்டர் ஷ்ரவன்குமார் நிருபர்களிடம் கூறும்போது, கடந்த ஆண்டில் கண்டறியப்பட்ட குறைபாடுகள் இந்த ஆண்டு சரி செய்யப்படும். பக்தர்களுக்கு தேவையான குடிநீர், நிழற்பந்தல், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூடுதலாக செய்து தரப்படும். திருவிழாவுக்கு வருகை தரும் அனைவருக்கும் எந்தவித இடையூறுகளும் இல்லாமல் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்றார்.
அப்போது கோட்டாட்சியர் யோக ஜோதி, துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், தாசில்தார் ராஜு ஆகியோர் உடன் இருந்தனர்.