பள்ளிகளில் முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு
தூத்துக்குடியில் பள்ளிகளில் நடந்துவரும் முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடியில் பள்ளிகளில் நடந்துவரும் முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வருகிற 7-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தூய்மைப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று சாமுவேல்புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மற்றும் சோரீஸ்புரம் அரசு உயர்நிலை பள்ளிகளில் நடந்து வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், நேரில் சென்று ஆய்வு செய்தார்.
கண்காணிப்பு
பின்னர் கலெக்டர் செந்தில்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 88 மேல்நிலைப்பள்ளிகள், 524 தொடக்கப்பள்ளிகள் உள்பட அனைத்து பள்ளிகளிலும் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள் உதவியோடு சுத்தம் செய்யும் பணிகள் நடந்துள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள ஒவ்வொரு வட்டத்திலும் துணை கலெக்டர் தலைமையிலான குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள 21 பள்ளிகளிலும் சுத்தம் செய்யும் பணிகளை மாநகராட்சி மேயர் என்.பி. ஜெகன் துரிதப்படுத்தி உள்ளார். பள்ளிகளில் உள்ள வகுப்பறைகள், மேசைகள், இருக்கைகள், கழிப்பறைகள், குடிநீர் தொட்டிகள் ஆகியவை சுத்தம் செய்யப்படுகிறது. மேலும் பள்ளிகளில் உள்ள மின் அமைப்புகளையும் ஆய்வு செய்து பழுதுகள் இருந்தால் சரி செய்யப்படும். பள்ளிகள் வருகிற 7-ந் தேதி திறக்கப்பட உள்ளதால் மாணவ-மாணவிகளுக்கு தேவையான வசதிகளை வழங்குவதற்காக இந்த பணிகள் நடைபெற்று வருகிறது.
கல்வி கடன்
தனியார் பள்ளிகளில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ், மாணவர் சேர்க்கை நடைபெறும் பணிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையிலான குழுவினர் கண்காணித்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 56 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 80-க்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளிகள் இருக்கின்றன. இந்த பள்ளிகளில் படித்து கல்லூரியில் சேரும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி கடன் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாணவ-மாணவிகளுக்கு பள்ளிப்படிப்பு முடித்து கல்லூரியில் சேருவதற்கு பொருளாதார சூழல் தடையாக இருக்கக்கூடாது என்று கனிமொழி எம்.பி. வலியுறுத்தி உள்ளார். அதன்படி ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம், பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகளின் இருப்பிடம், பெற்றோரின் நிலை, மதிப்பெண்கள், வங்கி கணக்கு, கல்லூரியில் சேர்வதற்கான விவரங்கள், கல்வி கட்டணம் போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
கல்வி கடன் தேவைப்படும் மாணவ-மாணவிகளுக்கு அடுத்த வாரம் முதல் வங்கிகளில் கடன்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
அரசு பள்ளிகளின் வசதிகள்
புதுமைப்பெண் திட்டம் நடைமுறைக்கு வந்தபிறகு அதிகளவில் மாணவிகள் கல்லூரியில் சேர்கின்றனர். திருச்செந்தூர் பகுதியில் பிளஸ்-2 முடித்து வறுமை காரணமாக கல்லூரியில் சேராத ஒரு மாணவி 2 ஆண்டுகளுக்கு பிறகு கல்லூரியில் சேர்ந்து உள்ளார். மாநகராட்சி பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைகள் திறந்தபிறகு 300-ஆக இருந்த மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை 700-ஆக உயர்ந்து உள்ளது. அரசு பள்ளிகளில் வசதிகளை அதிகரித்து தரத்தினை உயர்த்துவதற்கு மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதனால் அரசு பள்ளிகளில் அதிக அளவில் மாணவ-மாணவிகள் சேர்ந்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வில், மாநகராட்சி மேயர் என்.பி. ஜெகன், தூத்துக்குடி தாசில்தார் பிரபாகரன், பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்வித்துறை, உள்ளாட்சி அமைப்பு பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.