வெள்ளாற்றில் அமையவுள்ள கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு


வெள்ளாற்றில் அமையவுள்ள கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
x

வெள்ளாற்றில் அமையவுள்ள கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியத்தை சேர்ந்த 73 கிராமங்களுக்கான கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக பெண்ணகோணம் வெள்ளாற்றில் 4 நீர் உறிஞ்சு கிணறுகள் அமைக்கப்பட உள்ளன. ரூ.22 கோடியே 84 லட்சம் மதிப்பீட்டில் அமையவுள்ள இந்த நீர் உறிஞ்சு கிணறு பணிகளை மாவட்ட கலெக்டர் கற்பகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வெள்ளாற்றின் தென்கரை அருகே நீர் சேகரிப்பு தொட்டி, நீருந்து நிலையத்திலிருந்து 68 கிலோமீட்டர் தூரத்திற்கான நெகிழ் இரும்பு குழாய், 5 தரைமட்ட தொட்டிகள் மற்றும் புதிதாக கட்டப்படவுள்ள 2 தரைமட்ட தொட்டிகள் என இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பணிகள் பொதுமக்கள் எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டது. பின்னர் லெப்பைக்குடிகாடு பொதுமக்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வேப்பூர் ஊராட்சி மக்களுக்கு மட்டுமல்லாது, லெப்பைக்குடிகாடு பேரூராட்சி பொதுமக்களுக்கும் இத்திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. தற்போது நடைபெற்று வரும் பணிகள் குறித்தும், பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலெக்டர் கற்பகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பணிகளை விரைந்து முடிக்கக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து, நோவா நகர் பகுதியில் ரூ.7 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலை, ரூ.4 லட்சத்து 8 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிமெண்டு சாலை, ரூ.10 லட்சத்து 73 ஆயிரம் மதிப்பீட்டில் 2 இடங்களில் அமைக்கப்படவுள்ள பேவர் பிளாக் சாலை, ரூ.2 லட்சத்து 65 ஆயிரம் மானியத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்பையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது திருமாந்துறை பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ஊரக சந்தை கட்டிடத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர உத்தரவிட்டார். மேலும் அதே பகுதியிலுள்ள அங்கன்வாடி மையத்தினையும் நேரில் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.


Next Story