குழந்தை தொழிலாளர்கள் சட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொள்ள கலெக்டர் அறிவுறுத்தல்


குழந்தை தொழிலாளர்கள் சட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொள்ள கலெக்டர் அறிவுறுத்தல்
x

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உணவு, மோட்டார் நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர் சட்டத்தின்கீழ் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உணவு, மோட்டார் நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர் சட்டத்தின்கீழ் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.

தடுப்பு குழு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு, அமைப்புசாரா தொழிலாளர் துறையின் செயல்பாடுகள் மற்றும் குழந்தை மற்றும் வளர் இளம் பருவ தொழிலாளர் சட்டம் குறித்த மாவட்ட தடுப்பு குழு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழித்தல் சட்டம் தொழிலாளர் துறைக்கு மாற்றம் செய்த பின்னர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மரம் வெட்டுதல், அரிசி ஆலை, விவசாயம் மற்றும் வீட்டு பணியாளர்கள் போன்ற பணியில் இருந்து இதுவரை 68 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் மறு வாழ்விற்காக அரசு நிவாரணத் தொகை தலா ரூ.20 ஆயிரம் வழங்கி இருக்கிறது. இத்தொகை தற்போது ரூ.30 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. கொத்தடிமை தொழிலாளர்களுக்கு உடனடி மறுவாழ்வு நிவாரணத் தொகை, ரேஷன் அட்டை, சாதி சான்றிதழ், வீட்டு மனை பட்டா, வேலைவாய்ப்பு, கல்வி, தொழில் திறன் பயிற்சி, சுய உதவிக் குழுக்களில் உறுப்பினராக சேர்த்தல் மற்றும் மருத்துவ வசதிகள் ஆகியவைகளை பெற்று வழங்கவும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்த்து அவர்களுக்காக நல திட்டங்களை பெற நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

பள்ளிகளில் சேர்க்க வேண்டும்

குழந்தை தொழிலாளர்களை மீட்டு அவர்களுக்கான கல்வி வசதி அடிப்படை உரிமைகளை வழங்கிடும் வகையில் தேசிய கல்வி திட்டத்தின் கீழ் பள்ளிகளில் சேர்க்க வேண்டும்.

கடைகள் மற்றும் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் ஆகிய நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர் சட்டத்தின் கீழ் மாதந்தோறும் ஆய்வுகள் செய்து குழந்தை தொழிலாளர் இல்லாத நிலையை உருவாக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெளிமாநில தொழிலாளர்கள்

அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1 லட்சத்து 36 ஆயிரத்து 741 தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். மேலும் புலம்பெயர்ந்த வெளி மாநில தொழிலாளர்களையும் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களையும் பதிவு செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகளிலும், அரசு மருத்துவமனைகளிலும் விவசாய தொழிலாளர்கள், மீன்பிடித் தொழிலாளர்கள், செங்கல் சூளை தொழிலாளர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள், நலவாரிய குரூப் சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ஞானவேல், மகளிர் திட்ட இயக்குனர் நானிலதாசன், அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம் ராமகிருஷ்ணன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அனுசுயா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார், முன்னாடி வாங்கி மேலாளர் ஆலியம்மா ஆபிரகாம், வாலாஜா அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் உஷா நந்தினி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

==========


Next Story