தலைக்கவசம் அணிந்து மோட்டார்சைக்கிளில் கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் விழிப்புணர்வு ஊர்வலம்
தஞ்சையில் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைக்கவசம் அணிந்து மோட்டார்சைக்கிளில் விழிப்புணர்வு ஊர்வலம் மேற்கொண்டார்.
தஞ்சையில் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைக்கவசம் அணிந்து மோட்டார்சைக்கிளில் விழிப்புணர்வு ஊர்வலம் மேற்கொண்டார்.
மருத்துவக்கல்லூரி சாலை
தஞ்சை மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைத்து உயிரிழப்புகளை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் எடுத்து வருகிறார். அந்த வகையில் ஒரு முன்மாதிரி சாலையை ஏற்படுத்தும் நோக்கில் முதற்கட்டமாக மருத்துவக் கல்லூரி சாலையினை விபத்தில்லா பகுதியாக மாற்றுவதற்கு வட்டார போக்குவரத்து துறை, போக்குவரத்து போலீஸ், நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி, தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி, 108 ஆம்புலன்ஸ், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செயல் திட்டம் வகுத்து வருகிறார்.
இதற்காக தஞ்சை மேம்பாலம் ரவுண்டானா முதல் பிள்ளையார்பட்டி ரவுண்டானா வரை 6.5 கிலோமீட்டர் தூரம் சாலை தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணியினை தஞ்சை மாவட்ட ரெட்கிராஸ் ஒருங்கிணைத்து வருகிறது.
மோட்டார்சைக்கிள் ஊர்வலம்
இதையடுத்து பல்வேறு துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடன் தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து மருத்துவக்கல்லூரி சாலையில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வினை ஏற்படுத்தினார்.
அப்போது கலெக்டர் கூறுகையில், மருத்துவக்கல்லூரி சாலையில் போக்குவரத்து விதிமுறைகளை 100 சதவீதம் அமல்படுத்த அனைத்து துறைகளும் கூட்டாக செயல்பட உள்ளதாகவும், பொதுமக்கள் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து விபத்தில்லா சாலையாக மாற்றுவதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்"என்றார்.
இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன், வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா, நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் கீதா, மோட்டார்வாகன ஆய்வாளர் ஆனந்த், அரசு போக்வரத்துக்கழக கோட்ட மேலாளர் தமிழ்ச்செல்வன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், போக்குவரத்து விசாரணை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் ரமேஷ், 108 ஆம்புலன்ஸ் மாவட்ட மேலாளர் மோகன்ராஜ், ரெட்கிராஸ் தலைவர் வரதராஜன், துணைத்தலைவர் முத்துக்குமார், பொருளாளர் சேக்நாசர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.