கலெக்டர் கார்மேகம் தேசிய கொடி ஏற்றினார்
சேலத்தில் நடந்த 75-வது சுதந்திர தினவிழாவில் கலெக்டர் கார்மேகம் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். விழாவில் 33 பயனாளிகளுக்கு ரூ.57¼ லட்சத்தில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
சேலத்தில் நடந்த 75-வது சுதந்திர தினவிழாவில் கலெக்டர் கார்மேகம் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். விழாவில் 33 பயனாளிகளுக்கு ரூ.57¼ லட்சத்தில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
சுதந்திர தினவிழா
நாடு முழுவதும் 75-வது சுதந்திர தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தினவிழா சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக மாவட்ட கலெக்டர் கார்மேகம் காலை 9 மணிக்கு காந்தி மைதானத்துக்கு காரில் வந்தார். அப்போது அவரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் வரவற்றார்.
பின்னர் காலை 9.05 மணிக்கு கலெக்டர் கார்மேகம் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது, போலீஸ் பேண்டு வாத்திய குழுவினர் தேசிய கீதம் இசைத்தனர். தொடர்ந்து வானில் மூவர்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டன.
அணிவகுப்பு மரியாதை
தொடர்ந்து கலெக்டர் கார்மேகம், காவல்துறையினரின் அணிவகுப்பை திறந்த ஜீப்பில் சென்றவாறு பார்வையிட்டு ஏற்றுக்கொண்டார். இதையடுத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. இதனை தொடர்ந்து கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்த பனமரத்துப்பட்டி ஒன்றியம் பெரமனூர் ஊராட்சி செயலாளர் ராஜேந்திரனின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் நிவாரண உதவித்தொகை ரூ.25 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.
நலத்திட்ட உதவிகள்
மேலும், தாட்கோ துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.29 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பீட்டில் பயணியர் வாகனம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 பேருக்கு ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் விபத்து இல்லாமல் 20 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய அரசு வாகன டிரைவருக்கு 4 கிராம் தங்க பதக்கம், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 26 விளையாட்டு வீரர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் என மொத்தம் 33 பயனாளிகளுக்கு ரூ.57 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நற்சான்றிதழ்
இதையடுத்து பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 41 அலுவலர்களுக்கும், மாநகர காவல்துறை துணை கமிஷனர் மாடசாமி, சூரமங்கலம் உதவி கமிஷனர் நாகராஜன் உள்பட 37 போலீசாருக்கும், மாவட்ட காவல்துறையை சேர்ந்த 29 போலீசாருக்கும், மேட்டூர் காவிரி ஆற்றின் வெள்ள நீரில் சிக்கிய 3 பேரை பத்திரமாக மீட்ட 25 தீயணைப்புத்துறை வீரர்களுக்கும், முதல்-அமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிறப்பாக பணியாற்றிய 3 மருத்துவமனைகளுக்கும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 10 மாணவ, மாணவிகளுக்கும் நற்சான்றிதழ்களை கலெக்டர் கார்மேகம் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் மாவட்டத்தில் உள்ள சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களின் வீடுகளுக்கு அரசு அலுவலர்கள் நேரில் சென்று கதர் ஆடை அணிவித்து அவர்களை கவுரவித்தனர்.
கலை நிகழ்ச்சிகள்
முடிவில், தேசபக்தி, இயற்கையை பாதுகாப்போம், பெண்களின் வீரம், பிற மாநிலங்களின் பண்பாடு உள்ளிட்ட கருத்துகளை மையமாக கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முதலாம் உலகப்போரில் பங்குபெற்ற சேலம் மாவட்ட வீரர்களின் நினைவு சின்னத்துக்கு கலெக்டர் கார்மேகம் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
முன்னதாக நடந்த சுதந்திர தினவிழாவில் போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா, போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபினபு, எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பாலசந்தர், துணை கமிஷனர்கள் மாடசாமி, லாவண்யா, உதவி கலெக்டர் விஷ்ணுவர்த்தினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.