பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் கலெக்டர் லலிதா ஆய்வு


பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் கலெக்டர் லலிதா ஆய்வு
x
தினத்தந்தி 27 Nov 2022 12:15 AM IST (Updated: 27 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் லலிதா ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் லலிதா ஆய்வு செய்தார்.

ஆய்வு

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வள்ளாலகரம் மற்றும் திருவிழந்தூர் ஆகிய ஊராட்சிகளில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் லலிதா ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக வள்ளாலகரம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தினையும், ரூ.6 லட்சம் செலவில் பத்மாவதி நகரில் சிறு பாலம் அமைக்கும் பணியினையும், ரூ.5.56 லட்சம் செலவில் அபிராமி நகரில் சிறு பாலம் அமைக்கும் பணியினையும், 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சம் செலவில் புதிதாக அமைய உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விரைந்து முடிக்க உத்தரவு

தொடர்ந்து திருவிழந்தூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பொட்டவெளி பகுதியில் உள்ள பள்ளியில் கட்டப்பட்டு வரும் கழிவறை அமைக்கும் பணியினையும், சமையல்கூடம் அமைக்கும் பணியினையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சம் செலவில் கழுகாணிமுட்டம் குளம் மறு சீரமைக்கும் பணியினையும், 15- வது நிதிக்குழு மானியத்திட்டத்தின் கீழ் சிறு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியினையும் என மொத்தம் ரூ.66 லட்சத்து 22 ஆயிரம் செலவில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைவாகவும், துரிதமாகவும், தரமாகவும் முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

ஆய்வின்போது மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்பரசன், மீனா, வள்ளாலகரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுதா ராபர்ட் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story