வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் லலிதா ஆய்வு
சீர்காழியில், வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் லலிதா ஆய்வு மேற்கொண்டார்
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட காந்தி பூங்காவில் உள்ள கறிக்குளம், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் சீரமைப்பு மற்றும் மேம்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை மாவட்ட கலெக்டர் லலிதா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து ஈசானிய தெருவில் உள்ள காமராஜர் அவென்யூ பூங்கா ரூ.52 லட்சம் மதிப்பீட்டில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ளது. அதனையும், தாடாளன்கோவில் பள்ளி அருகில் ரூ.23 லட்சத்தில் கட்டப்படும் சமுதாயக்கூடம் உள்பட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளையும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
வடிகாலை தூர்வார நடவடிக்கை
பின்னர் மாவட்ட கலெக்டர் நிருபர்களிடம் கூறுகையில், சீர்காழி நகராட்சி பகுதியில் கலைஞர் நகரப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.7.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் 5 குளம், 2 பூங்காக்கள் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், பணிகள் நடைபெறும் பகுதியில் உள்ள பொதுமக்கள் கருத்துக்களை கேட்டு அதற்கு ஏற்றவாறு வளர்ச்சி திட்ட பணிகளை செயல்படுத்த அறிவுறுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், சீர்காழி நகர் பகுதியில் மழை நேரத்தில் சாக்கடை நீர் தேங்கி நிற்பதால் அவதி அடைந்து வருவதாக பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் வடிகால்களை தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாவும் அவர் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது நகரசபை தலைவர் துர்கா ராஜசேகரன், துணை தலைவர் சுப்பராயன், ஆணையர் (பொறுப்பு) ராஜகோபால், நகர ஆய்வாளர் நாகராஜ், பணி மேற்பார்வையாளர் விஜயேந்திரன் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.