கலெக்டர் மோகன் தேசிய கொடி ஏற்றினார்


கலெக்டர் மோகன் தேசிய கொடி ஏற்றினார்
x
தினத்தந்தி 27 Jan 2023 12:15 AM IST (Updated: 27 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் த.மோகன் தேசிய கொடி ஏற்றினார். இவ்விழாவில் 181 பேருக்கு ரூ.1 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

விழுப்புரம்

விழுப்புரம்:

இதையொட்டி விழா மைதானத்திற்கு காலை 8 மணியளவில் மாவட்ட கலெக்டர் த.மோகன் வருகை தந்தார். அவரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா மற்றும் போலீசார் வரவேற்றனர். சரியாக காலை 8.05 மணிக்கு கலெக்டர் த.மோகன், தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அமைதியை வலியுறுத்தும் வகையில் வெண் புறாக்களையும், வண்ண, வண்ண பலூன்களையும் வானில் பறக்க விட்டார்.

அதனை தொடர்ந்து கலெக்டர் த.மோகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவுடன் திறந்த ஜீப்பில் சென்று காவல்துறையினர், தீயணைப்புத்துறை, வனத்துறை, ஊர்காவல் படையினர், தேசிய மாணவர் படை, சாரண, சாரணீயர், இளம் செஞ்சிலுவை சங்கத்தினர் ஆகியோரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசுகள் அமர்ந்திருந்த இடத்திற்கே சென்று அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்து நினைவுப்பரிசு வழங்கி குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

நலத்திட்ட உதவிகள்

அதன் பின்னர் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 65 போலீசார்களுக்கு முதல்-அமைச்சரின் பதக்கங்களையும் மற்றும் மருத்துவத்துறை, சுகாதாரத்துறை, காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, முன்னாள் படைவீரர் நலத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறை, பொதுப்பணித்துறை, வேளாண்மைத்துறை, கூட்டுறவுத்துறை, வனத்துறை, வணிக வரித்துறை, வேலைவாய்ப்புத்துறை, போக்குவரத்துத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள், ஊழியர்கள் என 356 பேருக்கு நற்சான்றிதழ்களையும் கலெக்டர் த.மோகன் வழங்கினார்.

அதனை தொடர்ந்து, முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியின் கீழ் 4 பேருக்கு ரூ.4 லட்சம் நிதியுதவியும், முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் 2 பேருக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவியும், வருவாய்த்துறை சார்பில் 4 பேருக்கு ரூ.16 லட்சம் வடகிழக்கு பருவமழை நிதியுதவியும், சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 20 பேருக்கு ரூ.2.40 லட்சத்தில் முதியோர் உதவித்தொகையும், 58 பேருக்கு ரூ.6 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பில் விதவை உதவித்தொகையும், ஒரு திருநங்கைக்கு ரூ.12 ஆயிரத்தில் உதவித்தொகையும், முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 10 பேருக்கு ரூ.2 லட்சத்து 17 ஆயிரத்து 500 மதிப்பில் இயற்கை மரணம், ஈமச்சடங்கு உதவியும், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ஒருவருக்கு ரூ.7,990 மதிப்பில் நலத்திட்ட உதவியும், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2 பேருக்கு ரூ.11 ஆயிரத்தில் நலத்திட்ட உதவியும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 9 பேருக்கு ரூ.46,219 மதிப்பில் நலத்திட்ட உதவியும், தோட்டக்கலைத்துறை சார்பில் 8 பேருக்கு ரூ.3,60,800 மதிப்பில் நலத்திட்ட உதவிகளும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் 2 பேருக்கு ரூ.27.48 லட்சத்தில் நலத்திட்டஉதவியும், தாட்கோ மூலம் 5 பேருக்கு ரூ.31,20,944 மதிப்பில் நலத்திட்ட உதவிகளும், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 5 பேருக்கு பணி நியமன ஆணை, 6 பேருக்கு ரூ.16,63,740 மதிப்பில் நலத்திட்ட உதவிகளும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 44 பேருக்கு ரூ.10,20,290 மதிப்பில் நலத்திட்ட உதவிகளும் என மொத்தம் 181 பேருக்கு ரூ.1 கோடியே 18 லட்சத்து 94 ஆயிரத்து 483 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

கலை நிகழ்ச்சிகள்

விழாவையொட்டி தேசப்பற்றை உணர்த்தும் வகையில் பள்ளி- கல்லூரி மாணவ- மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அதுபோல் தமிழர்களின் பாரம்பரிய கலையான மல்லர்கம்ப கலையிலும் மாணவர்கள் ஈடுபட்டு அசத்தினர். இவ்விழாவில் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, கூடுதல் கலெக்டர் (ஊரக வளர்ச்சி முகமை) சித்ரா விஜயன், திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவிதேஜா, எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் லட்சுமணன், புகழேந்தி, சிவக்குமார், மாவட்ட வன அலுவலர் சுமேஷ்சோமன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் யசோதாதேவி, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் கணேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் மகாராணி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பரிதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு, தாசில்தார் ஆனந்தகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story