அனைத்து ஊராட்சிகளிலும் சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம்


அனைத்து ஊராட்சிகளிலும் சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம்
x

ஈரோடு மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

ஈரோடு

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

கிராமசபை கூட்டம்

இதுகுறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினமான நாளை மறுநாள் (திங்கட்கிழமை) பகல் 11 மணிக்கு கிராமசபை கூட்டங்கள் நடைபெற உள்ளன. கூட்டம் நடைபெறும் இடம், நேரம் ஆகியன தொடர்புடைய கிராம ஊராட்சிகள் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும்.

சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராமசபை கூட்டங்களில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றுதல், சுகாதாரம், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல், ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், நீர்வழிப்பாதை மற்றும் நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு அகற்றுதல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் -2, கலைஞர் வீடு வழங்கும் திட்டம், 2010 -மறு கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் உள்ளிட்ட கூட்ட பொருட்கள் விவாதிக்கப்படும்.

தேசியக்கொடி

மேலும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் அரசு அலுவலக கட்டிடங்களிலும், இன்று முதல் (சனிக்கிழமை) நாளை மறுநாள் (திங்கட்கிழமை) வரை தேசியக்கொடி பறக்கவிட வேண்டும். நாளை மறுநாள் ஊராட்சி அலுவலகங்களில் ஊராட்சி தலைவர்கள் மட்டுமே தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும்.

வேறு எவரேனும் தேசியக்கொடி ஏற்றுவதாக குழப்பம் விளைவித்தாலோ, தேசியக்கொடியை அவமதித்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக புகார்களை 0424 2260087 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story