படித்த வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்


படித்த வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்
x

படித்த வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வேண்டி விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

ஈரோடு

படித்த வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வேண்டி விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

உதவித்தொகை

ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-

தமிழக அரசின் சார்பில் படித்த வேலைவாய்ப்பற்றோர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மாதம் ஒன்றுக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200-ம், எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300-ம், பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400-ம், பட்டதாரிகளுக்கு ரூ.600-ம் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு ரூ.600-ம், பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750-ம் பட்டதாரிகளுக்கு ரூ.1,000-ம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் வருகிற மார்ச் மாதம் 31-ந்தேதியுடன் முடிவடையும் காலாண்டிற்கு தகுதியுடைய படித்த வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வேண்டி விண்ணப்பிக்கலாம்.

இணையதளம்

விண்ணப்பங்களை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகியும் அல்லது https://tnvelaivaaippu.gov.in, www.tnvelaivaaippu.gov.in ஆகிய இணையதளம் வாயிலாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள் அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதியுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் பதிவினை தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து ஒரு வருடம் முடிவடைந்திருக்க வேண்டும்.

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 31.12.2022 அன்று 45 வயதும், இதர பிரிவினருக்கு 40 வயதும் கடந்திருக்க கூடாது. விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் பள்ளி, கல்லூரியில் நேரிடையாக படித்துக்கொண்டிருக்க கூடாது.

சுயஉறுதி ஆவணம்

விண்ணப்பதாரர் முற்றிலும் வேலையில்லாதவராக இருத்தல் வேண்டும். சுய வேலைவாய்ப்பிலும் ஈடுபட்டிருக்கக்கூடாது. விண்ணப்பதாரர் தனது பள்ளி, கல்லூரி கல்வியை முழுமையாக தமிழ்நாட்டில் முடித்திருக்க வேண்டும் அல்லது பெற்றோர், பாதுகாவலர் குறைந்தது 15 ஆண்டுகள் தமிழ்நாட்டில் குடியிருந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர் எந்தவொரு நிதி உதவியையும் பெறுபவராக இருத்தல் கூடாது.

இந்த உதவித்தொகை பெற முதல் முறையாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடையவர்கள் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து விண்ணப்பத்தினை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தொடங்கப்பட்ட கணக்குப்புத்தகம், ஆதார்கார்டு, ரேஷன் கார்டு மற்றும் அனைத்து கல்விச் சான்றுகளுடன் வருகிற பிப்ரவரி மாதம் 28-ந்தேதிக்குள் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கனவே உதவித்தொகை பெற்றுவரும் பொது மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிப்ரவரி மாதத்திற்குள் சுயஉறுதி ஆவணத்தினை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story