தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்த கோர்ட்டு ஊழியர்களால் பரபரப்பு
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் மாட்லாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி நாகராஜன். கடந்த 2005-ம் ஆண்டு தர்மபுரி-கிருஷ்ணகிரி இடையே தேசிய நெடுஞ்சாலையை 4 வழி சாலையாக விரிவாக்கம் செய்யும்போது இவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் 37 சென்ட் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டது. இந்தநிலையில் கூடுதல் இழப்பீடு வழங்கக்கோரி தர்மபுரி கோர்ட்டில் நாகராஜன் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான மேல்முறையீட்டில் கூடுதல் இழப்பீட்டு தொகையை வழங்க உத்தரவிடப்பட்டது. கூடுதல் இழப்பீட்டு தொகை மற்றும் அதற்குரிய வட்டி தொகை ஆகியவற்றை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாக கூறி நாகராஜன் கோர்ட்டில் முறையீடு செய்தார். இதையடுத்து கோர்ட்டு உத்தரவுப்படி ஊழியர்கள் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ள தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது கூடுதல் இழப்பீட்டு தொகையை வழங்க அதிகாரிகள் கால அவகாசம் கேட்டனர். இதனால் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளாமல் கோர்ட்டு ஊழியர்கள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.