சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்; சுகாதாரத்துறை விசாரணைக்கு கலெக்டர் உத்தரவு
தேனியில் சாலையோரம் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
தேனி கலெக்டர் அலுவலகம் பின்பகுதியில் திட்டச்சாலையோரம் நேற்று மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு இருந்தன. மூளைக்காய்ச்சல் மற்றும் வலி நிவாரண ஊசி உள்ளிட்ட காலி மருந்து புட்டிகளும் அதில் கிடந்தன. இதை கொட்டிச் சென்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்தநிலையில், கலெக்டர் அலுவலகம் அருகில் துணிச்சலாக மருத்துவ கழிவுகளை கொட்டிச் சென்றவர்களை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை துணை இயக்குனருக்கு, கலெக்டர் முரளிதரன் இன்று உத்தரவிட்டார். இதையடுத்து அங்கு கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை சுகாதாரத்துறையினர் அப்புறப்படுத்தினர். மேலும் அவற்றின் மாதிரிகளை எடுத்து, அவற்றை கொட்டிச் சென்றவர்களை கண்டுபிடிக்கும் பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "மருந்து புட்டிகளில் உள்ள கியூஆர் கோடுகளை கொண்டு அவை யாருக்கு விற்பனை செய்யப்பட்டது என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனம் மற்றும் அதன் விற்பனை பிரதிநிதி யாருக்கு விற்பனை செய்தார் என்பதை கண்டுபிடித்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.