கடைகளில் போதைப் பொருட்கள் விற்றால் உரிமம் ரத்துஅறிவிப்பு பலகையும் வைக்க கலெக்டர் உத்தரவு
கடைகளில் போதைப் பொருட்கள் விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.
வேலூர்
கடைகளில் போதைப் பொருட்கள் விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.
வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் போதை பொருட்களாக கருதப்படும் ஹான்ஸ் மற்றும் குட்கா, புகையிலை ஆகியவை விற்பனை செய்வதை ஏற்கனவே தடைசெய்யப்பட்டு அமலில் உள்ளது. இந்தநிலையில் சில வியாபாரிகள் கள்ளத்தனமாக தடைசெய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள்.
இதையடுத்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகத்தால் சிறப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. சோதனையின்போது மேற்படி பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட கடையின் உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மற்றும் கடையின் உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். எனவே வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வியாபாரிகளும் தங்கள் கடைகளின் முன்பு பொதுமக்களுக்கு நன்கு தெரியும் வகையில் இங்கு ஹான்ஸ், குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதில்லை என்ற அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.