வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் பழனி ஆய்வு
திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் பழனி ஆய்வு
திருவெண்ணெய்நல்லூர்
திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஏனாதிமங்கலம், சிறுவானூர் ஆகிய ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சி.பழனி நேரில் ஆய்வு செய்தார். முன்னதாக ஏனாதிமங்கலம் ஊராட்சியில் அங்கன்வாடி மையத்தில், குழந்தைகளின் வருகை குறித்த பதிவேடு, குழந்தைகளின் வயதுக்கேற்ற உடல் ஆரோக்கியம் குறித்த பதிவேடுகளை ஆய்வு செய்த கலெக்டர் ரூ.28 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பில் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டும் பணிகளையும் ஆய்வு செய்தார். தொடர்ந்து சிறுவானூர் ஊராட்சியில், பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கிடும் வகையில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் குடிநீர் இணைப்பு வழங்கும் பணிக்காக பயன்படுத்தப்பட உள்ள குடிநீர் இணைப்பு குழாய்களின் தரத்தை ஆய்வு செய்த அவர் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டும் பணிகளையும் ஆய்வு செய்தார். அப்போது திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஓம்சிவசக்திவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் நந்தகோபால கிருஷ்ணன், முபாரக்அலிபேக் உள்பட பலர் உடன் இருந்தனர்.