மயிலாடும்பாறையில் நடந்து வரும் அகழாய்வு பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு


மயிலாடும்பாறையில் நடந்து வரும் அகழாய்வு பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு
x

மயிலாடும்பாறையில் நடந்து வரும் அகழாய்வு பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டார்.

கிருஷ்ணகிரி

கலெக்டர் ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே மயிலாடும்பாறையில் நடந்து வரும் அகழாய்வு பணிகளை கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பர்கூர் தாலுகா ஐகுந்தம் ஊராட்சிக்கு உட்பட்ட மயிலாடும்பாறையில் 2021-ம் ஆண்டு நடத்தப்பட்ட அகழாய்வில் பெறப்பட்ட முக்கியத்துவமான இரண்டு காலகணிப்புகள் மூலம் இரும்பு காலத்தின் தொடக்கம் மற்றும் புதிய கற்காலத்தின் பிற்பகுதியிலிருந்து இரும்பு காலத்திற்கு மாறியதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

சான்றொரப்பன்மலை என்று அழைக்கப்படும் மலையின் அடுக்குகளில் புதிய கற்கால மற்றும் இரும்பு கால வாழ்விடங்கள் அமைந்துள்ளன. இந்த மலையின் உச்சியில் உள்ள பாறை உறைவிடங்களில் வாழ்விடத்திற்கான தொல்லியல் சான்றுகளுடன் பாறைகீறல் ஒன்றும் காணப்படுகிறது.

நிகழ்சுனை என்று அழைக்கப்படும் பாறை குகையில் சிவப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் தீட்டப்பட்ட பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன.

சுடுமண் பொருட்கள்

மயிலாடும் பாறையிலிருந்து பெறப்பட்ட தற்போதைய இரண்டு காலக்கணிப்புகள் தமிழகத்தில் இரும்பின் காலம் 4200 ஆண்டுகள் என்பதையும், புதிய கற்காலம் இதற்கு முந்தையது என்பதையும் உறுதிபடுத்தி உள்ளனர். அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ள பண்பாட்டு பொருட்கள் மூலம் இந்த பகுதி புதிய கற்காலம் முதல் வரலாற்று காலம் வரை தொடர்ந்து வாழ்விடமாக இருந்துள்ளதையும் அறிய முடிகிறது.

மயிலாடும்பாறை அகழாய்வின் போது ஈட்டி முனைகள், அம்பு முனைகள், இரும்பினால் ஆன கத்திகள், கோடாரி, ஈமச்சின்னங்களில் வைக்கப்படும் படையல் பொருட்கள், மூன்று கால் குடுவை உள்ளிட்ட பானைகள், கிண்ணங்கள் முதலியனவும், மக்கள் வாழ்விட பகுதியில் வட்ட சில்லுகள், பாசிமணிகள், சுடுமண்ணால் ஆன பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மயிலாடும்பாறையில் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி அகழாய்வின் போது கிடைக்கப்பெற்ற பொருட்கள் மற்றும் வணிகக்குழு கல்வெட்டுகளை நேரில் பார்வையிட்டார். அப்போது தொல்லியல் துறை அகழாய்வு இயக்குனர் சக்திவேல், அலுவலர் பரந்தாமன், பர்கூர் தாசில்தார் பன்னீர்செல்வி, ஊராட்சி மன்ற தலைவர் ரீனா கிரிதரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story