பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கி கலெக்டர் பாராட்டு
திருப்பத்தூரில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கி கலெக்டர் பாராட்டினார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு, அரசு நிதியுதவி பெறும் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ்-2 தேர்வில் வெற்றிபெற்ற 11 மாணவ, மாணவிகளுடன் கலெக்டர் அமர்குஷ்வாஹா கலந்துரையாடினார்.
அப்போது கலெக்டர் பேசியதாவது:-
பாட புத்தகங்களை தவிர பொது அறிவு புத்தகங்களையும் நன்றாக படிக்க வேண்டும். நன்றாக படித்து வருங்காலத்தில் நல்ல ஒரு தமிழ்நாடு அரசு பணியாளார், இந்திய ஆட்சிப்பணியாளர், மருத்துவர், பொறியாளர்களாக வர வேண்டும். வருங்காலத்தில் என்னவாக ஆக வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுங்கள். கல்லூரி படிப்பை நல்லமுறையில் முடித்து வாழ்வில் வெற்றிபெற வேண்டும் என தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து மாணவர்களுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கி அவர்களுடன் குழுப்புகைப்படம் எடுத்துக்கொண்டார். நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர்கள் லட்சுமி, பிரேமலதா, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் (பயிற்சி) கிரியாசக்தி, தீபாசுஜிதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சுதர்சனம், மாவட்ட கல்வி அலுவலர் வேதபிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.