பிளாஸ்டிக் கடைகளில் கலெக்டர் திடீர் ஆய்வு


பிளாஸ்டிக் கடைகளில் கலெக்டர் திடீர் ஆய்வு
x

ஆம்பூர் பஜாரில் உள்ள கடைகளில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தடை செய்யப்பட்ட 3½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பத்தூர்

3½ டன் பறிமுதல்

ஆம்பூர் நகராட்சி பஜார் வீதியில் அமைந்துள்ள பிளாஸ்டிக் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள், டம்ளர் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட சுமார் 2 டன் பிளாஸ்டிக் பொருட்களை கைப்பற்றினார்.

மற்றொரு கடையில் சுமார் 750 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களையும், உமர் சாலையில் அமைந்துள்ள ஒரு கடையில் 750 கிலோ பிளாஸ்டிக் பொருட்களையும் கைப்பற்றினார்.

அப்போது கலெக்டர் கூறியதாவது:-

கடுமையான நடவடிக்கை

திருப்பத்தூர் நகராட்சி பகுதிகளில் கடந்த 11-ந் தேதி பல்வேறு கடைகளில் தடை செய்யப்பட்ட 7 டன் பிளாஸ்டிக் பைகள் கைப்பற்றப்பட்டது. அதன் பின்பு வாணியம்பாடி நகராட்சி பகுதியில் 18-ந் தேதி சுமார் 500 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டது. ஆம்பூர் நகராட்சியில் 12-ந் தேதி பல்வேறு கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்வது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து நகராட்சிகளில் உள்ள கடைகளில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றார்கள்.

இதுவரையில் மாவட்டத்தில் மொத்தம் 11 டன் எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்யக் கூடாது எனவும் மீறி விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஆய்வின்போது மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன், நகராட்சி ஆணையர் ஷகிலா, உதவி பொறியாளர் கேசவன், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பணியாளர்கள், நகராட்சி அலுவலக பணியாளர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்


Next Story