தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் கவலை அடைய வேண்டாம்: தனிதிறனை கண்டறிந்தால் வாழ்க்கையில் வெல்ல முடியும் கலெக்டர் ஸ்ரேயா சிங் அறிவுரை
10 மற்றும் பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவிகள் கவலை அடைய வேண்டாம் என்றும், உங்களிடம் உள்ள தனி திறமையை கண்டறிந்தால் வாழ்க்கையில் வெல்ல முடியும் என்றும் கலெக்டர் ஸ்ரேயாசிங் அறிவுறுத்திள்ளார்.
10 மற்றும் பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவிகள் கவலை அடைய வேண்டாம் என்றும், உங்களிடம் உள்ள தனி திறமையை கண்டறிந்தால் வாழ்க்கையில் வெல்ல முடியும் என்றும் கலெக்டர் ஸ்ரேயாசிங் அறிவுறுத்திள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
கொரோனா கால இடைவெளி
ஒரு மாணவரின் எதிர்காலத்தை தீர்மானிப்பது 10 மற்றும் 12-ம் வகுப்பில் பெறப்படும் மதிப்பெண்கள் தான் என்று சமுதாயத்தில் ஒரு புரிதல் நிலவி வருகிறது. ஆனால் தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண்கள் மட்டுமே ஒரு மாணவரின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில்லை.
இக்காலகட்டத்தில் நம் சமுதாயத்தில் உள்ள மிகப்பெரிய பல தொழில் அதிபர்கள் அடிப்படை கல்வியைக்கூட முழுமையாக முடிக்காதவர்கள். இருப்பினும் அவர்களுடைய தனிப்பட்ட கடின உழைப்பாலும், திறனாலும் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளனர். வறுமையை வெல்லும் சக்தி கல்விக்கு உள்ளது. இருப்பினும் கல்வியால் மட்டுமே அது சாத்தியம் என்று கூறிவிட முடியாது.
கல்வியுடன் இணைந்து ஒரு நபரின் தனித்திறன், தொலைநோக்கு பார்வை, தலைமைத்துவம், மனபாங்கு மற்றும் கடின உழைப்பு என்று இவை அனைத்தும் இணையும்போது தான் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி என்பது சாத்தியமாகும். கொரோனா கால இடைவெளி குழந்தைகளின் கற்றல் திறனில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இக்காரணத்தால் கூட சிலர் தேர்ச்சி பெறாமல் போயிருக்கலாம் அல்லது குறைந்த மதிப்பெண்கள் பெற்றிருக்கலாம்.
கவலை வேண்டாம்
எனவே 10 மற்றும் 12-ம் வகுப்பில் குறைந்த மதிப்பெண்களோ அல்லது தோல்வியோ அடைந்திருந்தால் அதை நினைத்து மாணவர்கள் கவலையடைய வேண்டிய அவசியமில்லை. மற்றவர்கள் தேர்ச்சி பெற்று விட்டார்கள், அதிக மதிப்பெண்கள் வாங்கி விட்டார்கள் என்று உங்களை மற்றவரோடு ஒப்பிட்டு உங்களை நீங்களே தாழ்த்தியும், குறைத்தும் மதிப்பிடாதீர்கள். ஒவ்வொரு மாணவருக்கும் தனித்திறன் என்று ஒன்று உள்ளது. அதனை நீங்கள் அடையாளம் காணுங்கள். உங்களால் வாழ்க்கையில் வெல்ல முடியும்.
தேர்வு முடிவுகள் வந்ததில் இருந்து அங்கொன்றும், இங்கொன்றுமாக தமிழகத்தில் மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை அல்லது மதிப்பெண்கள் குறைவு என்று தங்களின் உயிரை தாங்களே மாய்த்து கொள்கின்றனர். இம்முடிவு முற்றிலும் தவறானது. சட்டத்திற்கு எதிரானது. நீங்கள் எடுக்கும் இம்முடிவு நீங்கள் தேர்ச்சி பெறாததால் அல்லது மதிப்பெண்கள் குறைவாக பெற்றதால் உங்கள் பெற்றோருக்கு ஏற்படும் மனவருத்தத்தைவிட வாழ்நாள் முழுவதும் மனவேதனையுடன் மன அழுத்தத்துடனும், கண்ணீருடனும் வாழவேண்டிய சூழ்நிலைக்கு உங்கள் மீது அன்பு கொண்ட பெற்றோரும், உடன் பிறந்தவர்களும் உறவினர்களும் தள்ளப்படுவார்கள்.
ஆலோசனை பெறலாம்
ஆதலால் எக்காரணத்தை கொண்டும் உங்கள் மதிப்பெண் குறித்தோ, தோல்வி குறித்து விரக்தி அடைய வேண்டாம். அப்படி உங்களுக்குள் மனவேதனை இருப்பின் கலெக்டராகிய என்னையும், எங்கள் அலுவலர்களிடமும் ஆலோசனைக்கு நீங்கள் அணுகலாம். உங்களுக்கு உதவியும், சேவையும், வழிகாட்டவும் நானும், என் அலுவலர்களும் காத்து கொண்டு இருக்கின்றோம்.
மாணவர்கள் தேர்ச்சி அடையாத போதோ அல்லது குறைந்த மதிப்பெண்கள் பெறும்போது பெற்றோர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தி ஆகாத காரணத்தால் அது குழந்தையின் மீது வெறுப்பாகவும், கோபமாகவும் மற்ற குழந்தையோடு ஒப்பிட்டு மனம் புண்படும்படியான வார்த்தையாகவோ வெளிப்படுகிறது. இது தவறு. இந்த நேரத்தில் குழந்தைக்கு அளவு கடந்த அன்பும் அரவணைப்பும் கொடுப்பது அவசியம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.