விழுப்புரம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் கலெக்டர் ஆய்வு
விழுப்புரம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
விழுப்புரம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் நேற்று மாவட்ட கலெக்டர் மோகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களுக்கு பரதம், குரலிசை, வயலின், நாதஸ்வரம், மிருதங்கம் போன்றவை கற்பிக்கப்பட்டு வருவதை பார்வையிட்ட அவர், மாணவர்களுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து, மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், தேவைப்படும் இசைக்கருவிகள் குறித்து கேட்டறிந்ததுடன் மாணவர்கள் அனைவரும் சிறப்பாக இசைக்கருவிகளை பயின்று தமிழகத்தின் பாரம்பரிய கலைகளை பாதுகாத்திட வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் மாணவர்களுக்கு சிறப்பான முறையில் குரலிசை, நாட்டியக்கலைகளை ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும். மாணவர்களின் திறமைகளை பலரும் அறியும் வகையில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்குபெற செய்வதற்கான நடவடிக்கைகளை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்.
அதனை தொடர்ந்து விழுப்புரம் காமராஜர் மைதானத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம், குடிநீர் வசதி, கழிவறை வசதிகள் குறித்து மாவட்ட கலெக்டர் மோகன் பார்வையிட்டு அங்கன்வாடி மையத்தில் நாள்தோறும் தூய்மைப்பணிகளை மேற்கொண்டு சுகாதாரமான முறையில் வைத்துக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கவிதா உள்பட பலர் உடனிருந்தனர்.