விழுப்புரம்ஆவின் நிறுவனத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
விழுப்புரம் ஆவின் நிறுவனத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு செய்தாா்.
விழுப்புரம் ஆவின் நிறுவனத்தில் பால் சார்ந்த உணவுப்பொருட்கள் தயாரிக்கப்படுவதை நேற்று காலை மாவட்ட கலெக்டர் சி.பழனி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆவின் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்படும் பொருட்கள் குறித்து தற்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்போது பால் பதனிடும் அறை, குல்பி ஐஸ்கிரீம், பால்கோவா தயாரிக்கும் அறை, ஆவின் பால் பாக்கெட் உற்பத்தி செய்யும் பகுதி போன்றவை குறித்து பார்வையிடப்பட்டது.
ஆவின் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் உணவுப்பொருட்கள் அதிகப்படியான பொதுமக்கள், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவுப்பொருட்கள் என்பதால் சுகாதாரமான முறையில் பொருட்கள் தயாரிக்கப்படுவதை உறுதி செய்வதுடன், எந்திரங்களை அவ்வப்போது தூய்மையாக பராமரிக்க வேண்டும், சுகாதாரமான முறையில் பொருட்கள் தயாரிப்பதற்கு ஏதுவாக பணியாளர்களுக்கு தேவையான கையுறை, தலையுறை போன்றவற்றை வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் சி.பழனி அறிவுறுத்தினார்.
அதை தொடர்ந்து ஆவின் நிறுவன அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஆவின் நிறுவனத்திற்கு நாள்தோறும் கொள்முதல் செய்யப்பட்டு வரப்பெறும் பாலின் அளவு, பாலில் இருந்து தயாரிக்கப்படும் உணவுப்பொருட்கள் குறித்த விவரம், வினியோகிக்கப்படும் பகுதிகள், நாள்தோறும் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் அளவு, விற்பனை சதவீதம் போன்றவை குறித்து கலெக்டர் சி.பழனி ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது ஆவின் நிறுவன பொது மேலாளர் ஜாய்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.