அங்கன்வாடி மையங்களில் கலெக்டர் ஆய்வு
விருதுநகர் அருகே அங்கன்வாடி மையங்களில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
விருதுநகர் அருகே உள்ள பட்டம்புதூர் அங்கன்வாடி மையங்களில் கலெக்டர் மேகநாத ரெட்டி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார். அத்துடன் கல்வி மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும் குழந்தைகளின் ஆரோக்கிய நிலை குறித்து சம்பந்தப்பட்ட அலுவலரிடம் கேட்டறிந்தார். குழந்தைகளின் வீடுகளுக்கு சென்று தாயாரிடம் குழந்தைகளின் ஆரோக்கிய நிலை, அவர்களுக்கு கண்மணித்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு, பெட்டக உணவு பொருள்கள், குழந்தைகள் உண்ணும் முறை ஆகியவற்றை கேட்டறிந்தார். மேலும் குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்பட அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்வதாகவும் தெரிவித்தார். மேலும் அங்கன்வாடி மைய வளாகத்தில் காய்கறி தோட்டம் அமைக்க பப்பாளி மற்றும் முருங்கைச்செடி விதைத்தொகுப்பினை வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் கலெக்டர் வழங்கினார். அப்போது வேளாண்மை துறை இணை இயக்குனர் உத்தண்டராமன், தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் ராதாகிருஷ்ணன், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜம் மற்றும் பஞ்சாயத்து உதவி இயக்குனர் உமாசங்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.