மகளிர் சுயஉதவிக் குழுக்களின் விவசாய பணிகளை கலெக்டர் ஆய்வு


மகளிர் சுயஉதவிக் குழுக்களின் விவசாய பணிகளை கலெக்டர் ஆய்வு
x

அத்தியூரில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் செய்யும் விவசாய முறைகளை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வுசெய்தார்.

வேலூர்

அத்தியூரில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் செய்யும் விவசாய முறைகளை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வுசெய்தார்.

கலந்துரையாடல்

வேலூர்மாவட்டம், ஊசூர் அடுத்த அத்தியூரில் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், மகளிர் சுய உதவி குழு பெண்களுடன் கலந்துரையாடல் செய்தார். இதில் சுய உதவி குழுக்கள் கடன் பெற்று, சுய தொழில் செய்வது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது. மேலும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஆட்டுக்குட்டிகள் வாங்க தலா ரூ.15 ஆயிரத்துக்கான வங்கி காசோலையை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் கடன் பெற்று கறவை மாடு, ஆடு மற்றும் நாட்டுக்கோழிகள் வளர்க்கப்படுவதை பார்வையிட்டார். விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் இயற்கை உரங்கள் மற்றும் பூச்சி விரட்டிகள் தயாரிப்பதை ஆய்வு செய்த அவர் மகளிர் சுய உதவி குழுவினர் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள மல்லி மற்றும் முல்லை பூ தோட்டங்கள், நெல் நடவு செய்தல் உள்ளிட்ட விவசாயம் செய்யும் முறை மற்றும் உபகரணங்களை எவ்வாறு பயன்படுத்துகின்றனர் எனவும் நேரில் சென்று பார்வையிட்டார்.

மாணவர்களிடம்...

பின்னர் அத்தியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கட்டிடம் மற்றும் அடிப்படை வசதிகள், சத்துணவு கூடத்தில் மதிய உணவுகள் தரமானதாக உள்ளதா என ஆய்வு செய்த கலெக்டர் குமாரவேல் பாண்டியன், வகுப்பறைகளுக்கு சென்று பாடம் கற்பிக்கும் முறை குறித்து மாணவர்களிடம் விசாரித்தார். இதனைத் தொடர்ந்து தெள்ளூர் ஊராட்சியில் விளையாட்டு மைதானம் அமைப்பது தொடர்பாக, தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டார்.

மேலும் ஊசூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டிடங்களில் வளர்ந்துள்ள செடிகள் மற்றும் பள்ளி வளாகத்தில் உள்ள செடிகளை அகற்ற உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது சப்-கலெக்டர் பூங்கொடி, மகளிர் திட்ட இயக்குனர் செந்தில்குமார், அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வின்சென்ட் ரமேஷ்பாபு, ராஜன்பாபு, மாவட்ட கவுன்சிலர் பாபு, ஊராட்சி மன்ற தலைவர்கள் அண்ணாமலை மற்றும் தேவிசுரேஷ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமச்சந்திரன், மண்டல துணை தாசில்தார் சுதா, வருவாய் ஆய்வாளர் ரஜினிகாந்த், பள்ளி தலைமை ஆசிரியர் தசரதன், ஊராட்சி செயலாளர் முகிலன், கிராம நிர்வாக அலுவலர்கள் தமிழ், அரவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story