மீன்பிடி துறைமுக விரிவாக்க பணி குறித்து கலெக்டர் ஆய்வு


மீன்பிடி துறைமுக விரிவாக்க பணி குறித்து கலெக்டர் ஆய்வு
x

குளச்சலில் மீன்பிடி துறைமுக விரிவாக்க பணி குறித்து கலெக்டர் அரவிந்த் ஆய்வு மேற்கொண்டார்.

கன்னியாகுமரி

குளச்சல்:

குளச்சலில் மீன்பிடி துறைமுக விரிவாக்க பணி குறித்து கலெக்டர் அரவிந்த் ஆய்வு மேற்கொண்டார்.

மீன்பிடி துறைமுக விரிவாக்கம்

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2008-ல் துணை முதல்-அமைச்சராக இருந்த போது குளச்சல் மீன்பிடித்துறைமுக திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி துறைமுக பணியை தொடங்கி வைத்தார். தற்போது குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தங்குதளமாக கொண்டு மீன்பிடி தொழில் நடந்து வருகிறது.

இங்கு விசைப்படகுகளை நிறுத்துவதற்கு போதிய வசதியில்லாமல் இருந்து வருகிறது. எனவே குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து அரசு உத்தரவின் பேரில் ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டது.

கலெக்டர் ஆய்வு

இந்தநிலையில் கலெக்டர் அரவிந்த் நேற்று குளச்சல் மீன்பிடித்துறைமுக பகுதிகளை பார்வையிட்டு துறைமுக விரிவாக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் விரிவாக்க சாத்தியக்கூறுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் மீன்பிடித்துறைமுக இணை இயக்குனர் காசிநாத பாண்டியன், உதவி பொறியாளர் அரவிந்த் குமார், இளநிலை பொறியாளர் ஆஷிக், கலெக்டர் நேர்முக உதவியாளர் ஸ்டீபன், குளச்சல் மீன்பிடித்துறைமுக உதவி இயக்குனர் விர்ஜின் கிராஸ், ஆய்வாளர் லிபின்மேரி, குளச்சல் நகராட்சி பொறியாளர் ஜீவா, சுகாதார அலுவலர் பிச்சையா பாஸ்கர், குமரி மாவட்ட விசைப்படகு மீன்பிடிப்பவர் நலச்சங்க தலைவர் பிரான்சீஸ், துணைத்தலைவர் வர்கீஸ், செயலாளர் பிராங்கிளின், பொருளாளர் அந்திரியாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

ஆய்வின் போது, பாழடைந்து காணப்படும் அரசு தும்பு ஆலை வளாகத்தில் மழைநீர் தேங்குவதை தவிர்க்க மணல் போட்டு சீரமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்தனர்.


Next Story