நாங்குநேரி பகுதியில் அரசு திட்டப்பணிகளை கலெக்டர் விஷ்ணு ஆய்வு


நாங்குநேரி பகுதியில் அரசு திட்டப்பணிகளை கலெக்டர் விஷ்ணு ஆய்வு
x

நாங்குநேரி யூனியன் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகளை கலெக்டர் விஷ்ணு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருநெல்வேலி

இட்டமொழி:

நாங்குநேரி அருகே உள்ள ஏமன்குளத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் கட்டப்பட்டு வரும் குளத்தை ஆழப்படுத்தி மதகு சீரமைக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் விஷ்ணு ஆய்வு செய்தார். பின்னர் சங்கனாங்குளம் பஞ்சாயத்து தெற்கு விஜயநாராயணம் மேலூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியையும், அங்கன்வாடி பள்ளியையும் ஆய்வு செய்தார். அங்கு செயல்பட்டு வரும் ஸ்மார்ட் வகுப்பறையை ஆய்வு செய்தார். தொடர்ந்து அங்கு கட்டப்பட்டு வரும் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், புதிய பல்நோக்கு கட்டிடம், சிவந்தியாபுரம் நடுமடை பெரியகுளம் நீர்வரத்து கால்வாயையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சங்கனாங்குளத்தில் பொதுமக்களிடமும், தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் வேலை செய்யும் பயனாளிகளிடமும் குறைகளை கேட்டறிந்தார். மேலும் ராமகிருஷ்ணாபுரம் பஞ்சாயத்தில் தரிசு நிலங்களை வேலியிட்டு பாதுகாக்கும் பணிகளை பார்வையிட்டார். அரசின் திட்டப்பணிகளை விரைந்து செயல்படுத்தி முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது கூடுதல் திட்ட இயக்குனர் சுமதி, தாசில்தார்கள் இசக்கிப்பாண்டி (நாங்குநேரி), செல்வகுமார் (திசையன்விளை), நாங்குநேரி யூனியன் ஆணையாளர் கிஷோர்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் மங்களம் கோமதி, துணைவட்டார வளர்ச்சி அலுவலர்கள் வினோலியா மனோரஞ்சிதம், பிரேமா, பஞ்சாயத்து தலைவர்கள் மோகனா யோசுவா (இறைப்புவாரி), எஸ்.சின்னத்தம்பி (சங்கனாங்குளம்), வளர்மதி சேர்மத்துரை (ராமகிருஷ்ணாபுரம்), துணைத்தலைவர்கள் முத்துகிருஷ்ணன், ராஜம்மாள், கீதா, ஊராட்சி செயலர்கள் முருகன், நம்பி, ஜான்சிராணி உட்பட பலர் கலந்துகொண்டனர்.



Next Story