3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் விற்றால் பூச்சிகொல்லி மருந்து விற்பனையாளரின் உரிமம் ரத்து கலெக்டர் உமா எச்சரிக்கை
3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் விற்றால் பூச்சிகொல்லி மருந்து விற்பனையாளரின் உரிமம் ரத்து கலெக்டர் உமா எச்சரித்துள்ளார்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் மருந்துக்கு நிரந்தர தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பூச்சி மருந்து விற்பனை நிலையங்களிலும் சிறப்பு ஆய்வுக்குழு மூலம் ஆய்வு மேற்கொண்டு 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே இம்மருந்தை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்துவதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும் பெட்டிக்கடைகள், மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட் ஆகிய இடங்களில் விற்பனை செய்யக்கூடாது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பூச்சிக்கொல்லி மருந்து விற்பனையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் மருந்தை விற்பனை செய்தால் அவர்களின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.