மேல்மலையனூர் கோவிலில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் ஆலோசனை


மேல்மலையனூர் கோவிலில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் ஆலோசனை
x

அமாவாசை விழாவை முன்னிட்டு மேல்மலையனூர் கோவிலில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்வது குறித்து கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.

விழுப்புரம்

விழுப்புரம்:

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடைபெறும் அமாவாசை விழாவினை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தருவது குறித்து முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் வருகிற 28-ந் தேதியன்று அமாவாசை விழாவை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொள்ள ஏதுவாக வசதிகள் செய்திடவும், குடிநீர் வசதிகள், தற்காலிக கழிவறைகள் ஏற்படுத்தித்தர வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை மூலம் கோவிலின் பாதுகாப்பு நலன் கருதி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அமாவாசை தினங்களில் கோவில் அலுவலகம் மற்றும் புறக்காவல் நிலையங்களில் சி.சி.டி.வி. மூலம் கண்காணிக்கப்பட வேண்டும்.

மருத்துவக்குழு

மேலும் காவல்துறையின் மூலம் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். சுகாதாரத்துறையின் மூலம் மருத்துவக்குழு மற்றும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள், கோவில் வளாகத்தில் தயார் நிலையில் இருக்க வேண்டும். உணவு கட்டுப்பாட்டுத்துறையின் மூலம் கோவில் வளாகத்தில் செயல்பட்டு வரும் கடைகளில் உள்ள பொருட்களில் காலாவதியான பொருட்களை கண்டறிந்து அகற்றிட வேண்டும். தீயணைப்புத்துறையயின் மூலம் கோவில் வளாகத்தில் தீத்தடுப்பு உபகரணங்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்களை தயார் நிலையில் இருந்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், திண்டிவனம் சப்-கலெக்டர் அமித் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story