வீட்டில் மத பிரசாரம் செய்வதற்கு கலெக்டர் விதித்த தடையை நீக்க முடியாது- மதுரை ஐகோர்ட்டு


வீட்டில் மத பிரசாரம் செய்வதற்கு கலெக்டர் விதித்த தடையை நீக்க முடியாது- மதுரை ஐகோர்ட்டு
x

வீட்டில் மதபிரசாரம் செய்வதற்கு கலெக்டர் விதித்த தடையை நீக்க முடியாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

வீ்ட்டில் மதபிரசாரம்

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தையை சேர்ந்த பாதிரியார் மரியஆரோக்கியம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், திங்கள்சந்தை கிராமத்தில் எனக்கு சொந்தமான குடியிருப்பு கட்டிடத்தில் கிறிஸ்தவ மத போதனை மற்றும் வழிபாடு நடத்தி வந்தோம். இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து புகார் அளித்தனர். அதன்பேரில் குடியிருக்கும் வீட்டில் மதப் பிரார்த்தனை நடத்த மாவட்ட கலெக்டர் தடை விதித்தார். இந்த தடை உத்தரவை ரத்து செய்து, எனது வீட்டில் கிறிஸ்தவ மதபோதனை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி விஜயகுமார் விசாரித்து பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

கலெக்டர் தடை உத்தரவு

மனுதாரர் கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை தனது வீட்டை மத வழிபாட்டிற்கு பயன்படுத்தி உள்ளார். இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த 80 சதவீத மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட கலெக்டருக்கு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் குடியிருக்கும் வீட்டை மத பிரசாரத்திற்கு பயன்படுத்தக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசின் விதிமுறைகளின்படி குடியிருக்கும் வீட்டை மத பிரசாரம் அல்லது வழிபாட்டு இடமாக மாற்ற அனுமதி இல்லை. அதற்கு அனுமதி பெற வேண்டும் என்றால் இதுகுறித்து மாவட்ட கலெக்டர்தான் முடிவெடுக்க வேண்டும். மனுதாரர் விவகாரத்திலும், கலெக்டர் தான் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மனு தள்ளுபடி

மனுதாரர் வீட்டின் அருகிலேயே 200 மீட்டர் தூரத்தில் 2 கிறிஸ்தவ ஆலயங்கள் உள்ளன. 300 மீட்டர் தூரத்தில் இந்து வழிபாட்டுத்தலம் உள்ளது. இங்கு சட்டம்-ஒழுங்கையும் அமைதியையும் பாதுகாப்பது மாவட்ட கலெக்டரின் கடமை. எனவே மாவட்ட கலெக்டரின் உத்தரவுக்கு கோர்ட்டு தடை விதிக்க தேவையில்லை. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Next Story