கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் பேச்சு
கிராமங்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார் என்று கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் தீபக் ஜேக்கப் பேசினார்.
கிராமங்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார் என்று கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் தீபக் ஜேக்கப் பேசினார்.
கிராம சபை கூட்டம்
தஞ்சை அருகே திருமலைசமுத்திரத்தில் காந்தி ஜெயந்தியைெயாட்டி கிராம சபை கூட்டம் தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் முன்னிலையில் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் வெங்கடேசன் வரவேற்றார். கூட்டத்தில் ஊராட்சி சார்பில், அடிப்படை வசதிகள், சாலை, கல்வி, சுகாதாரம் உள்பட பல்வேறு பணிகள் குறித்து விளக்கி கூறப்பட்டது.
பின்னர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் பேசுகையில்,
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கிராமங்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மக்களை தேடி மருத்துவம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம், நான் முதல்வன் திட்டம் போன்ற பல்வேறு சிறப்பு திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் தங்களது குழந்தைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும்.
மேல்முறையீடு செய்யலாம்
மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் பெயர் விடுபட்டவர்கள் இ-சேவை மையங்களில் குடும்ப அட்டையின் 'எண்' குறித்து தெரிவித்தால் விபரங்கள் அறியலாம். குறைகள் இருப்பின் 30 நாட்களுக்குள் கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்யலாம் என்றார்.
இதில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் சங்கர், ஒன்றியக்குழு துணைத் தலைவர் அருளானந்தசாமி, வேளாண் துறை துணை இயக்குனர் பால சரஸ்வதி, உதவி இயக்குனர் அய்யம்பெருமாள், தோட்டக்கலை அலுவலர் வெங்கடாசாமி, வேளாண் பொறியியல் உதவி இயக்குனர் மனோகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், நாராயணன், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அலுவலர் விஜய் ஆனந்த், தஞ்சாவூர் தாசில்தார் சக்திவேல், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அகிலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.