கல்லூரி பஸ் 7 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து; பேராசிரியை உள்பட 15 பேர் காயம்


கல்லூரி பஸ் 7 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து; பேராசிரியை உள்பட 15 பேர் காயம்
x

திருச்சியில் தனியார் கல்லூரி பஸ் ஒன்று 7 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பேராசிரியை உள்பட 15 பேர் காயம் அடைந்தனர்.

திருச்சி

பள்ளத்தில் பாய்ந்த கல்லூரி பஸ்

திருச்சியில் உள்ள மூகாம்பிகை என்ஜினீயரிங் கல்லூரிக்கு சொந்தமான பஸ் ஒன்று திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை சண்முகதாஸ் (வயது 50) என்பவர் ஓட்டி சென்றார். பஸ்சில், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என 35-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.ஐ.ஐ.எம். கல்லூரி அருகே சென்றபோது பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தில் திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். இதனால் பீதியடைந்த டிரைவர் அவர் மீது மோதாமல் இருப்பதற்காக பஸ்சை வலது பக்கம் திருப்பினார். இதில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக சென்று சாலையோரத்தில் இருந்த 7 அடி பள்ளத்தில் பாய்ந்தது.

15 பேர் காயம்

இந்த விபத்தில் கல்லூரி பெண் பேராசிரியர் ஒருவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மேலும், 14 பேர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இதையடுத்து, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவர்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து நவல்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story