பிளஸ்-2 மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி; அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார்
நெல்லையில் பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு உயர் கல்விக்கு வழிகாட்டும் ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சியை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார்.
நெல்லையில் பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு உயர் கல்விக்கு வழிகாட்டும் 'கல்லூரி கனவு' நிகழ்ச்சியை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார்.
வழிகாட்டுதல் நிகழ்ச்சி
நெல்லை பாளையங்கோட்டை அரியகுளம் சாரதா மகளிர் கல்லூரியில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பிளஸ்-2 படித்த மற்றும் படிக்கும் மாணவ-மாணவிகளின் உயர்கல்விக்கு வழிகாட்டும் வகையில் 'கல்லூரி கனவு' நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மேலும் மாணவ-மாணவிகளுக்கு வழிகாட்டி கையேடுகளை வழங்கி, ரூ.1.56 கோடி கல்விக்கடன்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கல்வியில் சிறந்த மாநிலம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சீரிய முயற்சியால் இந்தியாவிலேயே தமிழகம் கல்வியில் தலைசிறந்த மாநிலமாக திகழ்கிறது. இளம் தலைமுறையினரின் வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும், என்ற உன்னத நோக்கத்தோடு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகள் உயர்கல்விக்கு வழிகாட்டும் வகையில் கல்லூரி கனவு நிகழ்ச்சியை கடந்த 25-ந்தேதி முதல்-அமைச்சர் மு.கஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் பிளஸ்-2 மாணவ-மாணவிகள் தங்களது திறமைக்கேற்ப துறைகளை தேர்ந்தெடுத்து படிக்க முடியும்.
என்னென்ன மேற்படிப்புகள் உள்ளன? என்பது பற்றி இணையதளத்தை பார்த்து அறிந்து கொள்ளக்கூடிய சூழ்நிலை இப்போது வந்திருக்கிறது. இருந்தாலும் உங்கள் மதிப்பெண் அடிப்படையில் எந்த படிப்புகளை தேர்ந்து எடுக்கலாம்? எதிர்கால வேலைவாய்ப்புகள் எப்படி இருக்கின்றன? இதையெல்லாம் எடுத்துக்கூறி தமிழக அரசும் உங்களுக்கு வழிகாட்டுவதற்கான வாய்ப்புதான் இந்த நிகழ்ச்சி ஆகும்.
வற்புறுத்தக்கூடாது
மாணவர்களாகிய நீங்கள் தான் இந்த மாநிலத்தின் அறிவு சொத்துகள். உங்களை வளர்த்தெடுக்க வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. கல்விக்காக பெருந்தலைவர் காமராஜர் தமிழகம் முழுவதும் பள்ளிகளை திறந்தார். கலைஞர் கருணாநிதி தமிழ்நாடு முழுவதும் கல்லூரிகளை, பல்கலைக்கழகங்களை உருவாக்கினார்.
எனவே உங்கள் கல்லூரி கனவை நினைவாக்க இந்த நிகழ்ச்சியை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் பெற்றோரின் கனவையும், உழைப்பையும், நீங்கள் புரிந்து கொண்டு படிக்க வேண்டும். கல்வி பயில்வதில் பெற்றோர்கள் குழந்தைகளை வற்புறுத்தக்கூடாது, அவர்கள் விரும்பும் பாடங்களை தேர்வு செய்து படிக்க அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலெக்டர் விஷ்ணு
நிகழ்ச்சிக்கு கலெக்டர் விஷ்ணு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் 1,536 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பேராசிரியர்கள் ஆரோக்கியராஜ், சினிவாசன், சிவகுமார் உள்ளிட்டோர் பொறியியல் படிப்பில் என்னென்ன பாடத்திட்டங்கள் உள்ளன என்பதையும், எந்த பாடத்திட்டங்கள் படித்தால் என்னென்ன வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதையும் விரிவாக எடுத்துக்கூறினார்கள்.
கலை மற்றும் அறிவியியல் கல்வி தொடர்பான பாடத்திட்டங்கள் குறித்து சென்னை ஸ்டெல்லா மேரி கல்லூரி முதல்வர் ரேணுகா ராஜரத்னம் விளக்கி கூறினார். விகிதா, சிவகுமார் பழனியப்பன் ஆகியோரும் படிப்புகள் குறித்து பேசினர். நிகழ்ச்சியில் சேரன்மாதேவி உதவி கலெக்டர் ரிஷாப், மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ, பாளையங்கோட்டை யூனியன் தலைவர் கே.எஸ்.தங்கபாண்டியன், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் கனகராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஆ.பிரபாகரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, மாவட்ட கல்வி அலுவலர் வசந்தா, மாவட்ட முதன்மை கல்வி் அலுவலரின் நேர்முக உதவியாளர் டைட்டஸ் ஜான் போஸ்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.