கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் வாயில் முழக்க போராட்டம்


கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் வாயில் முழக்க போராட்டம்
x

கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் வாயில் முழக்க போராட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்

தமிழ்நாடு அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரியின் கவுரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் குரும்பலூர் அரசு கல்லூரி முன்பு கோரிக்கை முழக்க போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின்படி சமவேலைக்கு சமஊதியம் என்றவாறு ரூ.57 ஆயிரத்து 700 ஊதியம் அல்லது 7-வது ஊதியக்குழு வழிகாட்டுதலின்படி பல்கலைக்கழக நிதிநல்கை குழு பரிந்துரைத்த சம்பளம் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும். 167 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரிந்து வரும் 5,303 கவுரவ விரிவுரையாளர்களில் சுமார் 1,900 பேர் யூ.ஜி.சி. தகுதியை இன்னும் அடையவில்லை. மீதமுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் 2009-ன்படி எம்.பில். தகுதி பெற்றுள்ளனர். எஞ்சியுள்ளவர்கள் முனைவர் பட்டம் படித்து வருகின்றனர். எனவே கவுரவ விரிவுரையாளர் நலன்கருதி, யூ.ஜி.சி. தகுதி ஏற்படுத்திக்கொள்ள கால அவகாசம் வழங்க வேண்டும். இதற்கிடையே யூ.ஜி.சி. கல்வித்தகுதியை பெற்றுள்ளவர்கள் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்கள் என்ற தமிழக அரசின் உத்தரவாத கடிதத்தை பின்பற்றி வெளியிடப்பட்ட அரசு ஆணை எண் 56-ஐ நடைமுறைபடுத்த வேண்டும். 1,146 பணி இடங்களை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி நிரப்பிட சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களையும், தற்போதுவரை தகுதி பெற்ற கவுரவ விரிவுரையாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் ஆசிரியர் தேர்வுவாரிய தேர்வாணையம் அறிவித்துள்ள அறிவிப்பின்படி இனிவரும் காலங்களில் வெயிட்டேஜ் முறை இருக்காது என்று வெளியிட்டுள்ள அரசு ஆணைகள் 246, 247 மற்றும் 248 ஆகியவற்றை ரத்து செய்திடவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நடந்த இந்த போராட்டத்தில் கவுரவ விரிவுரையாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த வாரம் முழுவதும் போராட்டம் தொடரும் என்று ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.


Next Story