தனியார் கல்லூரியில் கூடுதல் கல்விக்கட்டணம் வசூலிப்பதாக புகார்
காங்கயம் அருகே தனியார் கல்லூரியில் கூடுதல் கல்விக்கட்டணம் வசூலிப்பதாக கூறியும், அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறியும் மாணவிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
தனியார் கல்லூரி மாணவிகள்
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் காங்கயம் அருகே தனியார் கலைக்கல்லூரியில் படிக்கும் மாணவிகள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
கல்லூரிக்கட்டணமாக ஆண்டுக்கு ரூ.22 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றார்கள். அதுவும் ஒரு ஆண்டுக்குள் அந்த கட்டணத்தை பிரித்து செலுத்திக்கொள்ளலாம் என்றார்கள். ஆனால் தற்போது ரூ.27 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கிறார்கள். அதற்கு உரிய ரசீதும் கொடுப்பதில்லை. அதுவும் தேர்வு எழுதுவதற்கு முன்பே கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். தாமதமாக கட்டினால் நாளொன்றுக்கு ரூ.75 அபராதம் விதிக்கிறார்கள்.
அடிப்படை வசதிகள்
போதுமான பேராசிரியர்கள் இல்லாததால் நாங்கள் கல்வி கற்பதில் சிரமம் உள்ளது. கல்லூரி முதல்வரிடம் தெரிவித்தால் எங்களை மிரட்டுகிறார். விளையாட்டுக்கு கட்டணம் வசூலிக்கிறார்கள். ஆனால் இதுவரை விளையாட்டு போட்டிகள் நடத்தப்படவில்லை. தண்ணீரில் புழு, பூச்சி உள்ளது. கல்லூரிக்கு முன் பஸ் நிறுத்தம் வசதியில்லை. கழிப்பிட வசதி உள்ளிட்ட உரிய அடிப்படை வசதியில்லாததால் மாற்றுச்சான்றிதழ் கேட்டும், தர மறுக்கிறார்கள். முழுமையான கட்டணம் செலுத்திய பிறகு தருவதாக கூறுகிறார்கள். மாணவிகளுக்கு உரிய நியாயம் கிடைக்கவும், சம்பந்தப்பட்ட நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.